ஆன்மிகம்

சுமங்கலியாக இறந்தவர்களை நினைத்து ஒரு புடவை; மகாளய பட்ச நாளில் சுபிட்சம் தரும் பூஜை

வி. ராம்ஜி

மகாளய பட்ச காலத்தில், சுமங்கலியாக இறந்தவர்களை மனதார வேண்டிக்கொண்டு புடவை வைத்து வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். முன்னோர்களின் ஆசியைப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச காலம் வரும். இந்த மகாளய பட்ச காலம் என்பது பதினைந்து நாட்கள். மகாளய பட்ச பதினைந்துநாட்களும் முன்னோர்களுக்கு உரிய நாட்கள். பித்ருக்களுக்கான நாட்கள். இந்த பதினைந்துநாட்களும் தினமும் தர்ப்பணம் செய்து, முன்னோரை வழிபட வேண்டும் என்றும், முன்னோரின் பெயரைச் சொல்லி, மந்திரங்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் விட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதேபோல், நம் குடும்பத்தில் சுமங்கலியாக இறந்துவிட்டவர்களை முக்கியமா இந்த மகாளய பட்ச நாளில் வணங்கி ஆராதிக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளய பட்ச நாளில், நம் முன்னோரை நினைத்து தினமும் நம்மால் முடிந்த தானங்களைச் செய்யவேண்டும். எதுவும் இயலாதெனில், இரண்டு பேருக்கு உணவுப் பொட்டலமாவது வழங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எனவே, முன்னோரை நினைத்து, இந்த மகாளய பட்ச நாளில், எவருக்கேனும் உணவு வழங்குங்கள்.
அதேபோல், நம் குடும்பத்தில் சுமங்கலியாக இறந்திருப்பார்கள். கன்னிப்பெண்ணாக இறந்திருப்பார்கள். மகாளய பட்ச காலத்தில், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வரும் ஆத்மாக்கள், அதாவது நம்முடைய முன்னோர்கள், நம் வீட்டுக்கு வருவார்கள், வந்து நாம் செய்யும் ஆராதனைகளை, தர்ப்பணங்களை, வழிபாடுகளைப் பார்க்கிறார்கள் என்று ஐதீகம். இதில் மகிழ்ந்து நமக்கு நல்வாழ்க்கான ஆசிகளை வழங்கி அருளுகிறார்கள் என்றும் புரட்டாசி அமாவாசை நாளில் மகாளய பட்சம் நிறைவுறும் தருணத்தில், மீண்டும் பித்ரு லோகத்துக்குச் சென்றடைகிறார்கள் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

இதேபோல், நம் வீட்டில் சுமங்கலியாகவோ கன்னிப் பெண்களாகவோ இறந்தவர்களும் மகாளய பட்ச காலத்தில், நம் வீட்டுக்கு வருகிறார்கள். மகாளய பட்ச காலத்தின் வெள்ளிக்கிழமையில், அவர்களை நினைத்து விளக்கேற்றுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அவர்களின் படங்கள் இல்லாவிட்டாலும் கூட, பூஜையறையில் விளக்கேற்றி வழிபடலாம். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்குடன் புடவை, ஜாக்கெட் வைத்து வழிபடுங்கள். குடும்பத்தார் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெள்ளிக்கிழமை மாலையில், வழிபடுங்கள். பிறகு, யாரேனும் சுமங்கலிக்கு புடவை, பழம், வெற்றிலை பாக்கு வழங்கி நமஸ்கரித்து ஆசி பெறுங்கள்.

இந்த வழிபாட்டால், வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம் முதலான சுபகாரியங்கள் நடந்தேறும். திருமணம் நடக்கும். பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவார்கள். இல்லத்தில் சகல செளபாக்கியங்களும் தந்தருள்வார்கள் முன்னோர்கள்.

SCROLL FOR NEXT