நோய் தீர்க்கும் மருத்துவர்களாக, மருத்துவக் கடவுளர்களாக திருவள்ளூர் வீரராகவ பெருமாளும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமியும் அருள்பாலிக்கிறார்கள். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டாலோ இங்கே தரப்படும் பிரசாதத்தை உட்கொண்டாலோ இதுவரை நம்மை படுத்தியெடுத்தி வந்த நோயெல்லாம் திரும் என்பது ஐதீகம்.
திருவள்ளூரில் உள்ளது வீராராகவ பெருமாள் கோயில், கோயிலும் திருக்குளமும் கொள்ளை அழகு. இந்த ஆலயம், நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது. மேலும் பித்ரு முதலான காரியங்கள் செய்வதற்கு ஏற்ற தலமாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.
சிதம்பரம், சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலும் மருத்துவராக சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம். இங்கு தரும் பிரசாதம் நோயைத் தீர்க்கும் வல்லமை கொண்டது எனச் சொல்லிச் சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.
வீரராகவ பெருமாள் போல், வைத்தீஸ்வர சுவாமியைப் போல், நோய் தீர்க்கும் கடவுளாகவே அருள்பாலிக்கிறார் தன்வந்திரி பகவான். புதன் கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்வந்திரி பகவானை மனதாரப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், நீண்டகாலமாக மருந்து மாத்திரைகள், மருத்துவமனை, சிகிச்சைகள் என்றிருப்பவர்களுக்கு தன்வந்திரி பகவானின் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
நமக்காக மட்டுமின்றி, நோயில் தவித்து வருபவர்களுக்காக நாமே கூட பிரார்த்திக்கலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஓம்நமோ பகவதே வாஸூதேவாய!
தன்வந்த்ரயே! அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணுவே நம:
அதாவது, அமிர்தகலசத்தை திருக்கரத்தில் ஏந்திக்கொண்டிருக்கும் வாசுதேவனே. தன்வந்திரி பகவானே. எல்லா நோய்களையும் தீர்ப்பவரே. மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாவிஷ்ணுவே... உங்களை வணங்குகிறேன் என்று அர்த்தம்.
தன்வந்திரி பகவானை தினமும் காலையில் பூஜையறையில் சொல்லுங்கள். இந்த ஸ்லோகத்தை 21 முறை சொல்லி வந்தால், நோயெல்லாம் பறந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.