செப்.27 நடராஜர் அபிஷேகம்
காவிரித் தென்கரைத் தலங்கள் 127-ல் 27-வது திருத்தலம் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் எனும் கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரன் திருக்கோயிலாகும். பதிகம் பெற்ற தலங்களுள் இத்தலம் கிழக்கே இருப்பதால் கீழ்க்கோட்டம் எனப்படுகிறது. புராணச் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அருளும் ஸ்ரீநடராசப் பெருமான் சிறப்பு வாய்ந்தவர்.
நாகராஜன் வழிபட்ட தலம்
இந்தப் பெரிய பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற நாகராஜன், ஒரு கட்டத்தில் பூமியைத் தாங்க முடியாமல் வருந்தினான். கயிலைக்குச் சென்று சிவனிடத்தில் போதிய வலுவைத் தருமாறு வேண்டினான். இறைவன் கும்பகோணத்திற்குச் சென்று ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, ஸ்ரீநாகேசுவரரை வணங்கி வலிமையைப் பெறுமாறு ஆணையிட்டார். நாகராசர் அவ்வாறே வழிபட்டு வலிமை பெற்றான். அவன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் நாகேசம் எனப் பெயர் பெற்றது.
தேர் வடிவ மண்டபம்
ஸ்ரீநாகேஸ்வரன் கோயில் மிகப் பெரிய கோயில். இராசகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோபுரத்தைக் கடந்து சென்றால் பெரிய முற்ற வெளி உள்ளது. தென்புறத்தில் சிங்கமுகத் தீர்த்தம். வடபுறத்தில் அம்பிகை சந்நிதி தெற்கு முகமாக இருக்கிறது. இரண்டாம் பிராகாரத்தில் சிறப்பான நடராஜர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் பேரம்பலம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. தேர் வடிவ அமைப்புடைய மண்டபம் இது. நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு குதிரைகள், நான்கு யானைகள் பூட்டிய நிலையில் இருக்கின்றன. உள்ளே இருக்கும் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் அற்புதமானது.
சிவகாமியம்மை தாளம் போடுகிற நிலையில், இரண்டு கரங்களிலும் தாளத்தோடு இருப்பது தனிச் சிறப்பு. நடன சபையில் திருமால், நாரதர், தும்புரு போன்றவர்கள் உடனிருந்து காட்சி கொடுக்கின்றனர். இத்தகு சிறப்பு மிகு மண்டபத்தை ஆனந்த தாண்டவ நடராஜ சபை என்பர். எதிரே வேலைப்பாடமைந்த மண்டபத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி இருக்கிறார். இந்த நடராஜப் பெருமானை நாவுக்கரசர் சுவாமிகள் தம் திருத்தாண்டகத்தில் “குடந்தைக்கீழ்க் கோட்டத்து எம் கூத்தனாரே” என்று பாடியருளியுள்ளார். அற்புதமான இந்த ஆனந்த நடராசருக்கு ஆண்டுக்கு ஆறுகால அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் நடைபெறும் அபிஷேகம் சிறப்புடையது.