திருவோண நட்சத்திர நாள், திருவாதிரை, ரோகிணி, அஸ்தம் அல்லது உங்களின் பிறந்த நட்சத்திரம் முதலான நாளில், திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேச பெருமாளை வணங்கலாம். மனதாரப் பிரார்த்தனை செய்யலாம். மங்காத செல்வங்களையும் இழந்த பதவியையும் கெளரவத்தையும் தந்தருள்வார் பெருமாள்.
சென்னை - வேலூர் சாலையில், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள திருப்பாற்கடல் பெருமாளை நினைத்து, அத்திப்பழ தானம் வழங்கினால், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானார். அதனால் பிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமம் கொண்டார். அந்தத் தலம் ‘திருப்பாற்கடல்’ என்றே இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.
திருப்பாற்கடல் எனும் அழகிய கிராமத்தில், அருகருகே அமைந்துள்ளது சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இங்கே பெருமாளின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேலு மங்கை தாயார்.
புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. வைகானச முறைப்படி பூஜைகள் நடைபெறும் ஆலயம். நாராயண சதுர்வேதி மங்கலம் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறது புராணம். சிறிய ஆலயம்தான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். இந்தத் தலத்தின் முக்கியமான விசேஷம்.... இந்தத் தலத்தின் விருட்சம் வில்வமும் துளசியும். சிவனாருக்கு உகந்த வில்வமும் பெருமாளுக்கு உகந்த துளசியும் விருட்சமாகக் கொண்ட திருத்தலம் இது.
27 நட்சத்திரங்களில், ‘திரு’ எனும் மரியாதை அடைமொழியுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டே இரண்டுதான். சிவனாருக்கு உரிய திருவாதிரை, பெருமாளுக்கு உரிய திருவோணம். சைவமும் வைணவமும் இணைந்த இந்தத் தலத்தில், திருவாதிரை நட்சத்திரக்காரர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டால், சகல பலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம். சந்திரன் பெற்ற சாபத்தால், அவனுடைய தேஜஸ் குலைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொலிவு தேயத் தொடங்கியது. 27 நட்சத்திர மனைவிகளில் ஒருவரான திருவோண தேவி, இந்தத்தலத்துக்கு வந்து பெருமாளை நோக்கி கடும் தவமிருந்தாள். இதன் பலனாக, சந்திரனின் சாபத்தைப் போக்கி அருளினார். பழைய தேஜஸைப் பெற்றான் சந்திரன் என்கிறது புராணம்.
எனவே, திருப்பாற்கடல் பெருமாளை, திருவோண நட்சத்திர நாளில் எவர் வேண்டுமானாலும் வந்து வணங்கி வழிபடலாம். சந்திரனுக்கு 27 நட்சத்திர தேவியரும் மனைவியர். இவர்களில் ரோகிணியும் அஸ்தமும் சந்திரனின் விருப்பத்துக்கு உரிய மனைவியர். ஆகவே திருவோண நட்சத்திர நாள், திருவாதிரை, ரோகிணி, அஸ்தம் அல்லது உங்களின் பிறந்த நட்சத்திரம் முதலான நாளில், திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேச பெருமாளை வணங்கலாம். மனதாரப் பிரார்த்தனை செய்யலாம். மங்காத செல்வங்களையும் இழந்த பதவியையும் கெளரவத்தையும் தந்தருள்வார் பெருமாள்.