ஆன்மிகம்

தொந்திகணபதிக்கு தோப்புக்கரணம்! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

வி. ராம்ஜி

விநாயகர், எளிமையானவர். இனிமையானவர். இவரை வழிபடும் முறை சுலபமானது. மஞ்சளில் நீர் குழைத்து, பிடித்து வைத்தாலே, அங்கே அதில் பிள்ளையார் வந்து உட்கார்ந்து கொண்டு அருள்பாலிக்கிறார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைச் செய்தாலும், அங்கே அதில் அவரின் சாந்நித்தியம் வந்து அமர்ந்து கொண்டு ஆட்சி செய்யும் என்கிறார்கள்.

கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். சொல்லப் போனால், நாம் கேட்காவிட்டாலும் நமக்கு என்னென்ன தேவையோ அவற்றை வழங்கி அருளக்கூடியவர் ஆனைமுகத்தான்.

கணபதியை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுபடும் என்கின்றன ஞானநூல்கள். அதனால்தான் அவருக்கு விக்னேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாக விவரிக்கின்றனர் ஆச்சார்யர்கள். கணங்கள் அனைத்துக்கும் அதிபதி அவர். அதனால் ஸ்ரீகணபதி என்று திருநாமம்!

நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாக, செவ்வனே செய்ய முடியும். திறம்பட சிந்திக்க முடியும். சிந்தித்து செயல்படும் வேலையைத்தான் தோப்புக்கரணம் தூண்டிவிடுகிறது.

விநாயகருக்கு முன்னே நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் தலையின் நெற்றிப் பொட்டுக்களில் குட்டிக் கொள்கிறோம். அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன. அப்படி குட்டிக் கொள்வதால், ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறுகின்றன. அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிறகு, வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு ’தோர்பி கர்ணம்’ போட வேண்டும். இதுவே பிறகு தோப்புக்கரணம் என மருவியது. கர்ணம் என்றால் காது என்று அர்த்தம்!

இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம் உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைத் தருகிறது. மனம் அமைதி அடைகிறது.

நாளை 22.8.2020 விநாயக சதுர்த்தி. இந்த நாளில், விநாயகருக்கு வீட்டில் பூஜை செய்யுங்கள். அப்போது உங்களால் முடிந்த அளவுக்கு தோப்புக்கரணமிட்டு, தொந்தி கணபதியைத் தொழுதிடுவோம்.


ஆனைமுகனே போற்றி. ஐங்கரனே போற்றி!

SCROLL FOR NEXT