மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள பிரசித்திபெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று பாலாலயம் நடைபெற்றது. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய மூன்று ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்களும் பங்கேற்று திருப்பணியைத் தொடக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்தி பெற்றதும், புராணப் பெருமை வாய்ந்ததுமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் அபிராமிப் பட்டராலும் சைவ சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆகும்.
இக்கோவிலுக்குக் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதனால் கோயிலின் பல பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டன. இதனால் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு முதல் கட்டமாகத் திருப்பணிகள் தொடங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவிலில் அமைந்துள்ள ஐந்து ராஜகோபுரங்களுக்கும் பாலாலயம் செய்யப்பட்டது. தருமபுர ஆதீன குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.