ஆடி கடைசி வெள்ளிக்கிழமையில், மறக்காமல் ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். தீயசக்திகளையெல்லாம் அழித்து, நல்லனவற்றையெல்லாம் அருளுவாள் அம்பிகை.
ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு, மிகவும் விசேஷமானது. இந்த மாதத்தில், அம்பிகை மாதிரியான சாந்தமான தெய்வங்களை வழிபடலாம். மகாலக்ஷ்மி வழிபாடு செய்து பிரார்த்தனைகள் செய்துகொள்ளலாம்.
இதேபோல், மாரியம்மன் திருநாமம் கொண்ட அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். கருமாரியம்மன், மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், ஏகெளரி அம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் முதலான மாரியம்மனை பிரார்த்தித்து வேண்டிக்கொள்ளலாம்.
இதேபோல், உக்கிர தெய்வ வழிபாடும் ஆடி மாதத்தில் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது. காளியம்மன், காளிகாம்பாள் (சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி), குழுமாயி அம்மன், ஊத்துக்காடு அம்மன், தீப்பாய்ச்சி அம்மன், மணலூர் மாரியம்மன், முக்கியமாக, பட்டமங்கலம் துர்கை முதலான தெய்வங்களை வணங்கலாம்.
இன்னும் முக்கியமாக, துர்கையை வணங்கலாம். ரொம்ப ரொம்ப மகத்துவமும் மகோன்னதமும் கொண்ட வழிபாடு இது.
பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகளில், ராகுகாலவேளையில் துர்கையை வழிபடுவோம். துர்கைக்கு விளக்கேற்றுவோம். எலுமிச்சை தீபம் ஏற்றலாம்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, 10.30 முதல் 12 மணி வரை உள்ள ராகுகாலத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். காலையிலேயே விளக்கேற்றியிருந்தாலும் ராகுகால வேளையில், துர்கையை நினைத்து விளக்கேற்றுங்கள். ஒரு ஐந்து நிமிடம் துர்காதேவியை நினைத்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
தீய சக்தியையெல்லாம் அழித்தொழிப்பாள் தேவி. நல்லனவற்றையெல்லாம் வழங்கி அருளுவாள் துர்காதேவி.