'உனக்கு சுக்கிர யோகம்தான் போ’ என்று நம்மைப் பார்த்துச் சிலர் சொல்லுவார்கள். அதேபோல், நாமும், ‘சுக்கிரன் உனக்கு உச்சத்துல இருக்கான்யா’ என்று சொல்லுவோம். சுக்கிர பகவானின் அருளிருந்துவிட்டால், வாழ்க்கையில் பொருளாதாரப் பிரச்சினையே இல்லை.
சுக்கிர பகவானை தினமும் வணங்கலாம். வீட்டில், பூஜையறையில் கைகுவித்து பிரார்த்திக்கும் வேளையில், சுக்கிரனையும் நினைத்துக்கொள்ளலாம். அவரிடமும் நம் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ‘எனக்கும் என் குடும்பத்துக்கும் உன்னுடைய அருள் வேண்டும்; தருவாயாக’ என்று மனமுருகி வேண்டிக்கொள்ளலாம்.
சுக்கிரனின் அருட்பார்வை இருந்துவிட்டால், வீட்டில் பணக்கஷ்டத்துக்கு இடமே இருக்காது. குறைவான வருமானம் இருந்தாலும் அட்சயப் பாத்திரம் போல் அதிலிருந்தும் ஒரு தொகையைச் சேமித்துவைத்தால் போதும்... அது இரட்டிப்பாகி, வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்.
சுக்கிர பகவானை நினைத்து அவரை பிரார்த்தனை செய்யச் செய்ய, வீட்டில் தனம் - தானியத்துக்குக் குறைவிருக்காது. ஆபரணங்கள் சேரும். பூமி முதலான சிக்கல்கள் அனைத்தும் விலகும். வீடு மனை யோகங்களைத் தந்தருள்வார். பொன்னும் பொருளும் வீட்டில் நிறைந்திருக்கச் செய்வார் சுக்கிர பகவான்.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். எனவே சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களிலும் சுக்கிர பகவான் காயத்ரியை வணங்குங்கள்.
நவக்கிரக சுக்கிர பகவான் காயத்ரி:
”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்”
அதாவது, அசுவக் கொடியை உடைய அசுர குருவே. சுபங்களையும் சுகங்களையும் தந்தருள்வாய். வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தனே. வக்கிரமின்றி, வஞ்சனையின்றி, வரங்களை தந்தருள்வாய்! என்று அர்த்தம்.
இந்த நவக்கிரக சுக்கிரபகவான் காயத்ரியைச் சொல்லச் சொல்ல, தினமும் 11 முறை சொல்லி வாருங்கள். தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். தொழிலில் இருந்த கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகி, முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வார் சுக்கிர பகவான்.