குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
குருவின் பார்வை பட்டாலே சகலமும் நமக்குக் கிடைத்தருளும் என்பது ஐதீகம். அதனால்தான் எல்லா தெய்வங்களையும் பக்கவாட்டில் நின்றுகொண்டு, எப்படி வேண்டுமானாலும் வழிபடுவோம். ஆனால் குரு பகவானை மட்டும் நேருக்கு நேராக நின்றுகொண்டு, குருவை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
நவக்கிரகங்களில் குரு பகவானும் ஒருவர். தேவகுருவான பிரகஸ்பதி, சிவனாரின் பரிபூரண அருளைப் பெற்று, கிரகங்களில் ஒன்று எனும் ஸ்தானத்தை அடைந்தார். நவக்கிரகங்களில் குருபகவான் எனும் பேறு பெற்றார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிந்தார்.
குருவின் பார்வை இருந்தால்தான், குருவின் யோகம் கிடைத்தால்தான் குருவின் ஆசி இருந்தால்தான் திருமண யோகம் கைக்கூடும் என்கிறது புராணம். ஆனானப்பட்ட பார்வதிதேவி, சிவனாரைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், அந்த விருப்பம் தள்ளிக்கொண்டே போனது. பின்னர், குருவின் அருளைப் பெற கடும் தவம் மேற்கொண்டார். தவத்தின் பலனாக, குருவின் பார்வையும் குருவி யோகமும் கிடைக்கப் பெற்றார். இதையடுத்து, சிவனாருக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடைபெற்றது என விவரிக்கிறது புராணம்.
எனவே, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும். குரு பகவானை, வியாழ பகவானை, நவக்கிரகத்தில் உள்ள் குரு பகவானை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால், குருவருள் கிடைக்கப் பெறலாம்.
இதுவரை திருமணமாகாமல் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். கல்யாண மாலை தோள் சேரும்.
அதுமட்டுமா? வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் நடந்தேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குரு பலம் கூடும்.
இதனால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு கிடைத்து முன்னுக்கு வருவீர்கள். இதுவரையிலான கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஸ்திரமான சொத்து சேர்க்கை நிகழும். குரு பகவான் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். சுபிட்ச வாழ்வு நிச்சயம்.
குரு வியாழ பகவான் காயத்ரி
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்
அதாவது, இடபக்கொடியைக் கொண்டவனே, தடங்கல்களையும் தடைகளையும் தகர்ப்பவனே. ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசனே. கிரக தோஷமின்றி எங்களை வாழவைத்து அருளுவாய்! என்று அர்த்தம்.
இந்த மந்திரத்தைச் சொல்லி, குருபகவானை வழிபடுங்கள். குருவருளையும் திருவருளையும் பெற்று இனிதே வாழுங்கள்.