ஆன்மிகம்

கோகுலாஷ்டமி பண்டிகை எப்போது? - சீடை, வெல்லச்சீடை, அதிரசங்கள் ரெடியா? 

வி. ராம்ஜி

கோகுலாஷ்டமி என்றுதான் பெரும்பாலானவர்கள் கொண்டாடுவார்கள். வைஷ்ணவர்கள், பாஞ்சராத்ர ஆகமத்தைக் கொண்டுதான் கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடுவார்கள்.

பாஞ்சராத்ர ஆகமப்படி கிருஷ்ண ஜயந்தி என்பது செப்டம்பர் மாதம் 10ம் தேதியே கொண்டாடப்படுகிறது. அதேசமயம் பெரும்பான்மையான பக்தர்கள், கோகுலாஷ்டமி என்றே கொண்டாடுவார்கள். அஷ்டமி திதியே கணக்கு. இதை, பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொண்டாடுவார்கள். அப்படிப் பார்த்தால், ஆகஸ்ட் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை நாளைய தினமே கோகுலாஷ்டமி திருநாள்.

சரி... ஆவணி மாதம்தானே கிருஷ்ணர் பிறப்பு. அதுவும் ஆவணி மாத அஷ்டமிதானே கணக்கு என்று சிலர் கேட்கலாம். இந்த முறை, புரட்டாசி மாதத்தின் மகாளய பட்சமானது, ஆவணி மாதத்திலேயே வந்துவிடுகிறது. ஆவணி அவிட்டம் எப்படி ஆடி மாதத்தில் வந்ததோ... அதேபோல், புரட்டாசி மகாளய பட்சமானது ஆவணி மாதத்திலேயே வந்துவிடுகிறது.

மகாளய பட்சம் என்பது பித்ருக்களுக்கான காலம். முன்னோர் வழிபாடுகளுக்கு உரிய நாட்கள். மகாளய பட்சம் என்பது அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்கள். இந்த நாட்களில், பித்ருக்களுக்கும் அவர்களை வழிபடுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம் என விவரிக்கிறார் ராமகிருஷ்ண சாஸ்திரிகள்.

மேலும் ஆவணி மாதத்தின் அஷ்டமியையோ அல்லது ரோகிணியையோ கணக்கெடுத்துக் கொண்டால், அவை பித்ருக்களின் காலமான மகாளய பட்ச காலத்தில் வருகிறது.

மேலும் இன்னொரு கணக்கும் உண்டு. ஆவணி அவிட்டத்தில் இருந்து வருகிற எட்டாம்நாள் அஷ்டமி. அதுவே கோகுலாஷ்டமி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆகவே, 11ம் தேதியான நாளைய தினம்தான் கோகுலாஷ்டமி எனும் வைபவம். எனவே, பாஞ்சராத்ர அடிப்படையில் அடுத்த மாதம் வருகிறது. சாஸ்திர அடிப்படையிலும் பஞ்சாங்க அடிப்படையிலும் 11.8.2020 செவ்வாய்க்கிழமை அன்று கோகுலாஷ்டமி வருகிறது.

நாளைய தினம் கோகுலாஷ்டமி. காலை 7.35 மணிக்குப் பிறகுதான் அஷ்டமி தொடங்குகிறது. எனவே அதற்கு முன்பு வரை, சப்தமி. ஆகவே, 7.35 மணிக்குப் பிறகு கண்ணபிரானை பூஜிக்கலாம்.அல்லது மாலையிலும் பூஜைகள் செய்யலாம். அவருக்கு தீப தூப ஆராதனைகள் செய்யலாம். சீடை, வெல்லச்சீடை, அதிரசம் முதலான பட்சணங்கள் நைவேத்தியம் செய்து வழிபடலாம். முக்கியமாக, வீட்டு வாசலில் இருந்து, பூஜையறைக்கு அரிசி மாக்கோலத்தில், கிருஷ்ணர் பாதம் வரையலாம்.

பக்தியுடன் நீங்கள் செய்யும் பூஜையில் குளிர்ந்து போய், உங்கள் குடும்பத்தையே அருளிக்காப்பார் பகவான் கிருஷ்ணர். வாழ்வின் சகல ஐஸ்வரியங்களையும் தந்து காத்தருள்வார் கிருஷ்ண பரமாத்மா.

SCROLL FOR NEXT