ஆன்மிகம்

ஆடி ஸ்பெஷல்; தனம் - தானியம் தரும் அன்னபூரணி வழிபாடு! 

வி. ராம்ஜி

’எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும் சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாம வண்டி ஓடுது’ என்று சொல்லாதவர்களே இல்லை. கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கடந்து, நமக்கு அன்னத்தை வழங்குபவள் சக்தி. அந்த சக்தியை அன்னபூரணி என்று அழைக்கிறோம்.

அன்னபூரணிதான், இங்கே விவசாயத்தைச் செழிக்கச் செய்கிறாள். உலக உயிர்களுக்குத் தேவையான தானியங்களைப் பெருக்கித் தருகிறாள். ஒவ்வொரு உயிருக்குமான உணவை, அன்னபூரணியே வழங்குகிறாள்.

அன்னபூரணியை எப்போதும் வணங்கலாம். வழிபடலாம். குறிப்பாக, ஆடி மாதத்தில் அன்னபூரணியை அவசியம் வழிபடவேண்டும்.

வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும் அன்னபூரணியை வழிபடுங்கள்.

பூஜையறையில் கோலமிட்டு, சின்னத் தட்டில் அல்லது கிண்ணத்தில், கொஞ்சம் பச்சரிசியை வைத்து அதையே அன்னபூரணியாக பாவித்து, பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

அப்போது, அன்னபூரணி காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள்.

அன்னபூரணி காயத்ரீ:
ஓம் பகவத்யை காசிவாசின்யை ச வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

அதாவது, பஞ்சமில்லாத வாழ்வைத் தரும் பகவதியே, உலக உயிர்களுக்கு அன்னமளிக்கும் மகேஸ்வரியே. காசியம்பதியில் வீற்றிருக்கும் அன்னபூரணி அன்னையே எங்களுக்கு அருள்வாயாக!’ என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

பிறகு சுத்த அன்னம் வைத்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

இல்லத்தில் தனம் - தானியம் பெருக்கித் தருவாள். சுபிட்சத்தைக் கொடுத்து அருளுவாள் அன்னபூரணி.

SCROLL FOR NEXT