ஆன்மிகம்

இன்னும் இருக்கு இரண்டு  ஆடி வெள்ளி;  மிஸ் பண்ணிடாதீங்க! 

வி. ராம்ஜி

இன்னும் இரண்டு ஆடி வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன. இந்த வெள்ளிக்கிழமைகளில், அம்பாளை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். அம்பாளை நினைத்து, ஒருவருக்கேனும் புடவையோ ஜாக்கெட் பிட்டோ... மங்கலப் பொருட்களோ வழங்குங்கள். உங்கள் வாழ்வில், இதுவரை நீங்கள் எதிர்பார்த்த எல்லா நல்லதுகளும் உங்களை தேடி வந்தடையும். வளமும் நலமும் தந்து, சகல செளபாக்கியங்களுடன் வாழச் செய்வாள் தேவி.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பார்கள். ஆடி மாதத்தில்தான் அன்னை எனும் மகாசக்தியானது பிரபஞ்சம் முழுவதும் பரவி வியாபித்து அருள்பாலிக்கக் காத்திருக்கிறது என்கின்றன புராணங்கள்.

இந்த மாதத்தில், முப்பது நாளும் அம்மனுக்குக் கொண்டாட்டம்தான். குதூகலமான அலங்காரங்கள்தான். கோலாகலமான விழாக்கள்தான். தினமும் அபிஷேகங்கள் செய்து, விசேஷ பூஜைகள் செய்வார்கள். சில கோயில்களில், பூச்சொரிதல் விழாக்களும் கூழ் வார்த்தல் வைபவங்களும் நடைபெறும்.

தாலி பிரித்துப் போடுதல் எனும் மங்கல நிகழ்வும் பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடனும் பால் குடங்கள் எடுத்து பிரார்த்தனையும் என விழாக்களும் விசேஷங்களும் விமரிசையாக நடந்தேறும்!

பொதுவாகவே செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள். அவளுக்கே உரிய ஆடி மாதத்தின் செவ்வாயையும் வெள்ளியையும் தனியே சொல்ல அவசியமே இல்லை. வேண்டுமோ? அதனால்தான், ஆடிச் செவ்வாயிலும் வெள்ளியிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் அம்பாள் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதோ... ஆடி வெள்ளி வரவிருக்கிறது. வருகிற 7ம் தேதி ஆடி மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை. இதையடுத்து 14ம் தேதி, ஆடி மாதம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை. இந்த ஆடி மாதத்தில், இன்னும் இரண்டே இரண்டு வெள்ளிக்கிழமைகள் உள்ளன.

அற்புதமான, அதிர்வுகள் கொண்டது ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை. இந்த மாதத்தில், வீட்டில் இதுவரை அம்பிகை வழிபாடு செய்ய இயலாதவர்கள், தரிசிக்கத் தவறியவர்கள், செவ்வாயிலோ வெள்ளிக்கிழமையிலோ இதுவரை அம்பிகையை வணங்காமல் விட்டவர்கள், இந்த இரண்டு வெள்ளிக்கிழமையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆடி இரண்டு வெள்ளிக்கிழமைகளை தவறவிடாதீர்கள்.

காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் படத்துக்கு பூக்களிடுங்கள். அம்பாள் படங்களுக்குப் பூக்களிடுங்கள். செந்நிற மலர்கள் அம்பிகைக்கு உகந்தவை. அம்பாள் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து, ஏதேனும் ஒரு பாயசம் நைவேத்தியமாகப் படையுங்கள், அம்மன் போற்றி சொல்லுங்கள். ஓம் சக்தி சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்கள். தெரியவில்லையே... என்பவர்கள் அவற்றை ஒலிக்கவிடுங்கள்.

பூஜையில், புடவையோ ஜாக்கெட் பிட்டோ வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அதை சுமங்கலிக்கு வழங்கி அவரிடம் ஆசி பெறுங்கள். உங்கள் குலம் தழைக்கும். மாங்கல்ய பலம் பெருகும். மங்கல காரியங்கள் சீக்கிரமே நடைபெறும். சுபிட்சம் உங்கள் இல்லம் தேடி வரும். இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்த சத்தான விஷயங்களெல்லாம் iஇல்லத்தில் வந்து குடிகொள்ளும்!

SCROLL FOR NEXT