அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி புதுச்சேரி அருகேயுள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு விசேஷ திருமஞ்சன பூஜைகள் நடைபெற்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆக.5) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடக்கவும், கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டி புதுச்சேரி அருகே உள்ள ஸ்ரீ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
முன்னதாக பால், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நறுமணமிக்க பன்னீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரோனா காரணமாக பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்தப்பட்டன.
படம் வைத்து பூஜை
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு புதுவையில் பல்வேறு இடங்களின் ராமர் படம் வைத்து பாஜகவினர் பூஜை செய்து வணங்கினர்.
பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து காமராஜர் சிலை அருகே இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு தந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் பங்கேற்புக்கு எதிர்ப்பு
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சிபிஐ (எம்-எல்) கட்சியினர் சாரம் ஜீவா சிலையருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலர் சோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அவர் கூறுகையில், "மதமும், அரசியலும் கலக்கக்கூடாது என்று இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விழாவில் பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.