கைலாசநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். 
ஆன்மிகம்

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

வீ.தமிழன்பன்

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் விடையாற்றி உற்சவம் இன்று நடைபெற்றது.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத்திற்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்குக் காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது.

அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் இவ்விழா, நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, காரைக்கால் கைலாசநாதர் கோயில் வளாகத்துக்குள்ளேயே மிகவும் எளிமையான வகையில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விழா கடந்த ஜூலை 1-ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் தொடங்கி, திருக்கல்யாணம், பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடும் பிச்சாண்டவர் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுடன் 5-ம் தேதி வரை விழா நடைபெற்றது.

கைலாசநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

விழாவையொட்டி ஒரு மாத காலத்துக்கு நாள்தோறும் அம்மையாருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெறும். அம்மையார் மணிமண்டபத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிகழாண்டு பொது முடக்கம் காரணமாக அம்மையார் கோயிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

மாங்கனித் திருவிழாவின் நிறைவாக இன்று (ஆக.3) விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை அம்மையாருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

இரவு அம்மையார் கோயிலிலிருந்து வழக்கமாக நடைபெறும் அம்மையார் வீதியுலாவுக்குப் பதிலாக கைலாசநாதர் கோயிலில் அம்மையார் பிரகார உலா நடைபெறவுள்ளது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிச்சாண்டவர்

இந்நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், கைலாசநாதர் கோயில், நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே.பிரகாஷ், உபயதாரர்கள், சிவாச்சார்யார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT