ஆன்மிகம்

ஆடிப்பெருக்கில்... வீட்டுக்கே வருவாள் காவிரித்தாய்! 

வி. ராம்ஜி

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி நதிதான் நினைவுக்கு வரும். தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளைத்தான் நினைக்கத் தோன்றும். ஆடிப்பெருக்கு என்கிற ஆடிப்பதினெட்டாம் நாளில், நதிக்கரைகளுக்கு வந்து மக்கள் வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகளும் வந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ளுவார்கள். குடும்பமாக வந்து, நதிதேவதையை வணங்குவார்கள்.

ஆனால் இப்போது இவை சாத்தியமில்லை. அதேசமயம் வீட்டிலிருந்தே வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வீட்டுப் பூஜையறையை முதலில் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் சுவாமி படங்களை அலங்கரியுங்கள். பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரில் சிறியதாக கோலமிடுங்கள்.

ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது குடத்தில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரை கோலத்தின் மீது வைத்துக்கொள்ளுங்கள். காவிரி, கங்கை, தாமிரபரணி, துங்கபத்ரா, வைகை முதலான புண்ணிய நதிகள் அனைத்தையும் அந்தத் தண்ணீரில் வந்து இறங்கும்படி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். முக்கியமாக ‘காவிரி அன்னையே, இந்த நீரில் எழுந்தருள்வாயாக. எங்களுக்கு புண்ணியத்தைத் தருவாயாக’ என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

இப்போது, அந்தத் தண்ணீரின் மீது கொஞ்சம் பூக்களை விடுங்கள்.

அடுத்து, காவிரித்தாய்க்கு கலவை சாதங்கள் நைவேத்தியம் செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் முதலானவற்றை நைவேத்தியத்துக்கு வைக்கவேண்டும். அதேபோல் பழங்கள் வைக்கவேண்டும். முக்கியமாக, ஆடிப்பெருக்கு பூஜையில் நாவல்பழத்துக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றுடன் காப்பரிசியும் வைத்து படைப்பார்கள்.

காவிரித்தாயை நினைத்து, மனதார வேண்டிக்கொண்டு, தாலிக்கயிறு மாற்றிக்கொண்டு நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளலாம். வீட்டுப் பெரியவர்களிடம் நமஸ்கரித்து ஆசி பெறுங்கள்.

இந்த ஆடிப்பெருக்கு, எல்லா சத்விஷயங்களையும் தந்தருளட்டும். நாம் நினைத்ததெல்லாம் கிடைத்து, பல்கிப் பெருகட்டும்.

SCROLL FOR NEXT