ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு; விருத்தி, லாபம், முன்னேற்றம்!  

வி. ராம்ஜி

ஆடிப்பெருக்கு நாளில், தொட்டதெல்லாம் துலங்கும். புதிதாகத் தொழில் தொடங்கினால் விருத்தியாகும். அளப்பரிய லாபம் பெறலாம். புதிய கலையையோ கல்வியையோ கற்கத் தொடங்கினால், கல்வியிலும் கலைகளிலும் சிறந்துவிளங்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடிப்பெருக்கு என்பது அற்புதமான, உன்னதமான நாள். இந்தநாளில், மனதாரவேண்டிக்கொண்டு செய்யும் எந்தக் காரியமும் மிகப்பெரிய லாபத்தைத் தரும். இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

இந்தநாளில், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன் தொகை வழங்கலாம். பூமிபூஜை போடலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். விதை இடுவதற்கு அருமையான நாளும் கூட!

வீட்டில் உள்ள வெள்ளிக்காசுகள் அல்லது சாதாரண காசுகளை சுவாமி படத்துக்கு முன்னே வைத்துக்கொண்டு, தூபதீப ஆராதனை செலுத்தி, அதை பீரோவில் மீண்டும் வைத்துவிடுங்கள். உங்கள் சம்பாத்தியம் பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், ஆடிப்பெருக்கு நாளில், கடனில் ஒருரூபாயையாவது நாளைய தினத்தில் (2.8.2020 ஆடிப்பெருக்கு) திருப்பிச் செலுத்துங்கள். பிறகு விரைவிலேயே கடனையெல்லாம் அடைக்கும் நிலை உருவாவதை உணருவீர்கள்.

ஆடிப்பெருக்கு நாளில், நற்காரியங்களைச் செய்யுங்கள். சத்தான விஷயங்களைச் செய்யுங்கள். முன்னேற்றப்பாதையில் வெகு விரைவில் செல்வீர்கள் என்பது உறுதி.

SCROLL FOR NEXT