ஆன்மிகம்

வாழ்க்கையை உயர்த்தும் குரு வார ஏகாதசி 

வி. ராம்ஜி

வாழ்க்கையை உயர்த்தும் குரு வார ஏகாதசியில், பெருமாளை வணங்குங்கள். துளசி சார்த்தி பெருமாளை வழிபடுங்கள். வேதனைகளையெல்லாம் போக்குவான் வேங்கடவன்.

ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதி நன்னாள். அதனால்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறோம். விரதம் இருக்கிறோம். கொண்டாடுகிறோம். மாதங்களில் நான் மார்கழி என்று திருமால் சொன்னதால், மார்கழி ஏகாதசி, மகத்துவம் வாய்ந்ததாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. மார்கழி மாதத்தின் ஏகாதசியை, வைகுண்ட ஏகாதசி என்று வணங்குகிறோம்.

பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பேர், மாதந்தோறும் வருகிற ஏகாதசியில், தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை ஸேவிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். துளசி தீர்த்தம் பருகி, விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இன்னும் சிலர், ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 30ம் தேதி வியாழக்கிழமை, ஏகாதசி. இந்த அற்புதமான நாளில், குரு வார நன்னாளில், வீட்டில் காலையும் மாலையும் பெருமாளை நினைத்து விளக்கேற்றுங்கள். துளசி கிடைத்தால், பெருமாள் படத்துக்கு சார்த்துங்கள். மனக்கிலேசம் விலகும். மனதில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் செல்வ ஐஸ்வரியங்களும் தந்து அருளுவார் வேங்கடமுடையான்.

ஆடி மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் மட்டும் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று (சிறிய ஆலயங்கள் எனில் திறந்திருக்கின்றன), பெருமாளை வழிபடுங்கள்.

புளியோதரை நைவேத்தியம் செய்வது விசேஷம். இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வாழ்வில் இன்னும் பல உன்னதங்களைப் பெறுவீர்கள்.

SCROLL FOR NEXT