ஆன்மிகம்

வரலட்சுமி பூஜை ஸ்பெஷல் : வருவாள் மகாலக்ஷ்மியே..! 

வி. ராம்ஜி

வரலட்சுமி பூஜையன்று, அக்கம்பக்கத்து சுமங்கலிகளையும் அழைத்து வீட்டில் பூஜை செய்யுங்கள். முடிந்த அளவு மங்கலப்பொருட்களை அவர்களுக்கு வழங்குங்கள். வீட்டில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.

வரலட்சுமி விரத பூஜையில் மிக முக்கியமானவற்றில் நோன்புக் கயிறும் ஒன்று.

ஆடி மாதத்தில் வளர்பிறை காலத்தில், பெளர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வருவது வரலட்சுமி விரத நன்னாள்.

முதல் நாள் பூஜையறையையும் சுவாமி படங்களையும் வீட்டையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். மறுநாள், வெள்ளிக்கிழமையன்று வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாக்கோலமிடுங்கள். செம்மண் கோலமிடுவதும் இன்னும் விசேஷம்.

பூஜையறையிலும் இதேபோல் கோலமிடுங்கள். மணைப்பலகையை அலங்கரித்து அதில் கலசம் வைத்து, கலசத்துக்குள் நாணயம், எலுமிச்சை, ஏலக்காய் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, மேலே, மாவிலைகளையும் மஞ்சள் தோய்த்த தேங்காயையும் வைத்துக் கொள்ளுங்கள்.

பழங்கள், இனிப்புகள், கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியத்துக்கு தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பூஜையில் நோன்புக் கயிறு கையில் கட்டிக்கொள்வது அவசியம். இப்போது கடைகளில் நோன்புக் கயிறு மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில், வெள்ளை நூலில், மஞ்சள் கொண்டு நனைத்து சரடாக்கிக் கொள்ளலாம்.

அந்த மஞ்சள் சரடின் நடுப்பகுதியில், மல்லிகை அல்லது ஏதேனும் ஒரு பூவைக் கொண்டு கட்டிவிடுங்கள். பொதுவாகவே, ஒன்பது நோன்புக்கயிறுகள் வைத்து பூஜிப்பது நல்லது. அதேபோல், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் படத்துக்கோ அல்லது அவர்களின் நினைவாகவோ மஞ்சள் சரடையும் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நோன்புக்கயிறை, கலசத்தின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை கலசம் வைத்து வழிபடவில்லையெனில், அம்பாள் படத்தின் திருவடியில் வைத்துக்கொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் உங்கள் வீட்டில் செய்யப்படும் வரலட்சுமி பூஜையில், வீட்டில் உள்ள சுமங்கலிகள், சிறுமிகள் ஆகியோருடன் அக்கம்பக்கத்து வீட்டு சுமங்கலிகளையும் அழைத்து பூஜையில் பங்கேற்கச் செய்யவேண்டும். பூஜை முடிந்ததும் அவர்களுக்கும் நோன்புக்கயிறு வழங்குங்கள்.

மேலும் ஜாக்கெட், கண்ணாடி, வளையல், மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வெற்றிலை பாக்குடன் வழங்குங்கள். வசதி இருந்தால், புடவையும் வைத்துக் கொடுக்கலாம். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை வழங்க வழங்க, வீட்டில் இன்னும் செல்வம் பெருகும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும் என்பது ஐதீகம்.

பூஜையறையில், நறுமண மலர்களுடன் துளசியும் அவசியம் இருக்கவேண்டும். மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ்மியும் வாசம் செய்யும் இடங்களில், துளசியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறது புராணம்.

கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்கள். அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லக்ஷ்மி ஸ்லோகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்து பூக்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுங்கள்.

வாழ்வில், இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்து அருளுவாள் மகாலக்ஷ்மி. தடைப்பட்ட திருமணம் முதலான சுப விசேஷங்களையெல்லாம் நடத்தித் தருவாள். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வாள்.

SCROLL FOR NEXT