ஆன்மிகம்

வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் : மாங்கல்ய வரம், மாங்கல்ய பலம், தனம் - தானிய - ஐஸ்வரியம் தருவாள்! 

வி. ராம்ஜி

வரலட்சுமி விரத நாளில், உரிய முறையுடன் பூஜையைச் செய்து தேவியை வேண்டிப் பிரார்த்தித்தால், மாங்கல்ய வரம் தந்திடுவாள். தாலி பலம் கொடுத்திடுவாள். தனம், தானியம் முதலான ஐஸ்வரியங்களை வழங்கிடுவாள் அம்பிகை.

ஆடி மாதம் பெண்களுக்கான மாதம். பெண்கள் வழிபடுவதற்கான மாதம். மிக முக்கியமாக திருமணமான பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை இது.

புகுந்த வீட்டில் வரலட்சுமி பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய, வம்சம் தழைப்பதற்கான பூஜை. குலம் தழைத்து ஓங்குவதற்கான பூஜை. ’இதெல்லாம் எங்கள் புகுந்தவீட்டில் வழக்கமில்லையே... என்ன செய்வது’ என்று நினைப்பவர்கள் கூட, வரலட்சுமி பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையின் பலன்களாலும் பூஜை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதியாலும் சகல ஐஸ்வர்யங்களும் வீடு வந்து நிறைவதாலும் தொடர்ந்து கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள்.

ஒவ்வொருவர் குடும்பத்திலும் சின்னச் சின்னதான மாறுபாடுகளோ வேறுபாடுகளோ இருக்கலாம். ஆனால், பூஜை முழுமை என்பது ஒரே விதமானதுதான். பெரும்பாலும், அம்பாளை, வீட்டுக்குள் அழைப்பதும், கலசத்தில் வரவழைத்து அமரச் செய்வதும், அலங்காரங்கள் செய்வதும், ஆராதனைகள் செய்வதும் கண்டு, குளிர்ந்து போய்விடுவாள் லக்ஷ்மி தேவி.

திருமணமான பெண்கள் தமிழக வழக்கப்படி, தனியாக அமர்ந்தோ, மற்ற சுமங்கலிகளுடனோ செய்வார்கள். கர்நாடக மாநிலத்தில் இந்த பூஜையை தம்பதியாக அமர்ந்து மேற்கொள்வார்கள். .

அன்னை லக்ஷ்மிக்கு, வடை பண்ணலாம். பால் பாயசம், கடலைப் பருப்பு பாயசம் பண்ணலாம். இட்லி. கொழுக்கட்டை, அதிரசம் முதலான பட்சணங்கள், சுண்டல், பழங்கள் என நைவேத்தியம் செய்யலாம். இன்னொரு விஷயம்... தங்களால் முடிந்ததைக் கொண்டு, நைவேத்தியம் செய்யலாம் தப்பே இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

’வருஷா வருஷம் பூஜை பண்ணுவோம். ஆனா தடைபட்டுருச்சு’ என்று வருந்துபவர்கள், ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியாதவர்கள், அருகில் பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கே நிகழும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

புதிதாகக் கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்று சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு, பிறந்த வீட்டில் இருந்து எல்லா சீர் வகைகளும் அனுப்பி வைப்பார்கள். அம்பாளின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என சிறப்பாக சீர்த்தட்டு போல் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

பூஜை செய்யும் இடத்தை, அழகுறச் சுத்தம் செய்து அம்பாளை அமர வைக்கும் இடத்தை தயார் செய்துகொண்டு, அக்கம்பக்கத்தாரையும் அழைத்து பூஜையில் கலந்துகொள்ளச் செய்யலாம்.

முன்பெல்லாம் காலத்தில், மண் தரை என்பதால், பசுஞ் சாணத்தைக் கொண்டு தரை மெழுகுவார்கள். சுத்தம் பண்ணுவார்கள். வீட்டுச் சுவரில் சுண்ணாம்பு அடித்து, சுவரில் மண்டபத்தில், கலசத்தில், வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப் போல் வண்ணக் கலவைகளால் ஓவியம் வரைவார்கள்.

அதேபோல், வரலக்ஷ்மி முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது. கண், மூக்கு, வாய், காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள் மட்டுமே கிடைக்கும். அவற்றைக் கொண்டு, சேர்த்து, அலங்கரித்துக் கொள்ளலாம்.

வெள்ளி, பித்தளை, வெண்கலம் அல்லது செப்புச் செம்புகளிலோ, சிறிய குடங்களிலோ கலசம் வைக்கவேண்டும். அதில், சந்தனத்தை இடுவார்கள். அந்த சந்தனத்தில் உருவங்களைப் பொருத்திவிடவேண்டும்.

கலசத்தில், அரிசியை நிரப்பி, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வெள்ளிக்காசுகள், தங்க நகை என அதில் போட்டு, அதன்மேல் மாவிலைக்கொத்தைச் சொருகி, குடுமி பிரிக்காத தேங்காயை, மஞ்சள் பூசி வைத்துக் கொள்ளவேண்டும். .
எலுமிச்சை பழம், விச்சோலை, கருகமணி ஆகியவற்றை வைப்பது மிக மிக அவசியம். வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுவது இன்றைய காலகட்டங்களில் வழக்கமாகிவிட்டது.

அம்பாள் உருவத்துக்கு, விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து அழகுபடுத்தலாம். அலங்காரங்கள் செய்யலாம். இதுபோல், அலங்கரித்து , அம்மனை தனியான இடத்தில் அமர்த்துவார்கள். பூஜை செய்யப்போகும் இடத்தில் மாக்கோலமிட்டு, செம்மண் பூசி அழகாக பந்தல் போல் வடிவமைப்பார்கள். ஒரு மேஜையைக் கொண்டு, பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளை வைத்துக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து அலங்கரிப்பார்கள்.

தாமரை, மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, ரோஜா, சம்பங்கி என மலர்ச்சரங்களும் மாலைகளும் அணிவிக்கலாம். குத்துவிளக்குகளை இரண்டு பக்கமும் வைத்து தீபமேற்றுங்கள்.

தன, தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடை பெரியவர்களைக் கொண்டு அதாவது வயதான சுமங்கலிகளைக் கொண்டு வலதுகையில் அணிந்து கொள்வார்கள்!

பூஜை செய்யும் பந்தலுக்குள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, மணைப்பலகை மீது கலசம் வைத்திருப்பார்கள்.
முதல்நாளான வியாழக்கிழமை, சாயங்காலத்திற்குப் பின் அம்பாளுக்கு விளக்கேற்றி சந்தனம் குங்குமமிட்டு, பூக்கள் சொரிந்து வழிபட்டு நமஸ்கரிக்க வேண்டும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை. அதிகாலை. வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து, மடியாக நைவேத்தியங்களைத் தயாரித்து, மண்டபத்தில் கோலமிடுங்கள். செம்மண் கோலமிடுங்கள். பூஜைக்கு தேவையானவற்றைக் கொண்டு, அம்பாளை எடுத்து வரவேண்டும். அம்பாள் அழைத்தல் என்று இதற்குப் பெயர்.

கற்பூர ஆரத்தி செய்யுங்கள். அவளை நமஸ்கரியுங்கள். உடன் ஒரு சுமங்கலி அல்லது, கன்னிப்பெண்ணின் இணைந்து, ’சகல செளபாக்கியங்களையும் அள்ளிக் கொடுக்கும் லக்ஷ்மித் தாயே.... நீ எங்கள் மனைக்கு வர வேண்டுமம்மா’ என்று சிரத்தையுடன், மனமுருகி அழையுங்கள். கவனமாக கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து, தீபங்களுடன் கூடிய மண்டபத்தில், கிழக்கு முகமாக வைத்து பூஜிக்கவேண்டும்.

பாக்யத லக்ஷ்மி பாரம்மா. லக்ஷ்மி ராவேமா இண்டிகி. எனப் பாடுங்கள். அல்லது தெரியவில்லையா? அந்தப் பாடலை ஒலிக்கவிடுங்கள். அம்மனுக்கு சகல உபசாரங்களையும் செய்து ஆசனத்தில் அமர வையுங்கள். ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத் துணி சார்த்துங்கள். அஷ்டோத்திர சத நாமாவளிகள் சொல்லுங்கள். அப்படிச் சொல்லும்போது, பூக்களினால் அர்ச்சனை செய்யுங்கள். தூப ,தீபங்களைக் காட்டி, நைவேத்தியம் செய்யுங்கள்.

நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து வைத்திருப்பதை அம்பாளின் பாதங்களில் வைத்து அதற்கும் பூஜை செய்யுங்கள். மஞ்சளும் பச்சரிசியும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்து சுமங்கலிகளுக்கும், கன்யா பெண்களுக்கும், வலது கையில் கட்டவேண்டும். அப்படிக் கையில் கட்டிக்கொள்ளும்போது, முன்னதாக கட்டிவிடுவோரின் கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்து குங்குமமிட்டு சரடைக் கட்டவேண்டும். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை 31.7.2020 அன்று வரலக்ஷ்மி விரதம். வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை. எனவே, ராகுகாலத்துக்கு முன்பே பூஜையைத் தொடங்கலாம். அதாவது 10.25 மணிக்குக் கூட ஆரம்பித்து பூஜை செய்யலாம்.
தன்னை அழைத்து, ஆராதித்த இல்லங்களுக்கு சுபிட்சத்தையும் வெளிச்சத்தையும் தந்து, நம்மையும் நம் வாழ்க்கையையும் உயர்த்தித் தந்தருள்வாள் தேவி. தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்வாள். தாலி வரத்தைத் தந்தருள்வாள்.

அம்பிகையைக் கொண்டாடுவோம். ஆனந்த வாழ்வைப் பெற்றிடுவோம்.

SCROLL FOR NEXT