அசுரர்களை வெற்றி கொண்ட இடமாதலால் ஜெயந்திபுரம் என்று அழைக்கப்பட்டு . செந்தில்புரம் என்று மருவி பின் திருச்செந்தூர் என்று ஆகியது. திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம் மற்றும் பண்டைய இலக்கியங்களில் அலை வாயில் என்ற பெயர்தான் இருந்தது. அருணகிரிநாதர்தான் இப்போது வழக்கில் உள்ள பெயரில் அழைத்தார். பரங்கியரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தக் கோவிலின் பரம பக்தன்.தினமும் இங்கு சுப்ரமணியருக்குப் பூஜை முடிந்த பின்புதான் உணவு உட்கொள்ளுவானாம். இதைத் தெரிந்துகொள்வதற்காக தன்னுடைய பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலிருந்து (68 கி.மீ.) செந்தூர் வரை 27 மணிக் கூண்டுகள் கட்டினான். பூஜை முடிந்தவுடன் ஒவ்வொரு மணியாக அடிக்கத் தொடங்கிக் கடைசியாகத் தன் கோட்டையின் மணிக்கூண்டில் அடித்த பின் தான் உணவருந்துவானாம்.இப்போதும்கூடச் சிதிலமடைந்த நிலையில் இரு மணிக் கூண்டுகளைக் கோட்டைக்கருகில் காணலாம்.
திருச்செந்தூர் கோவில், பாறை மேல் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த ஒரு படை வீடுதான் கடற்கரையில் உள்ளது. மற்ற ஐந்தும் குன்றுகளின் மேல் உள்ளது என்பது வழக்கு. 2000 ஆயிரம் ஆண்டு புராதனமான மூலவரின் சிலை டச்சுக்காரர்களால் 1648-ம் ஆண்டு களவாடப்பட்டுப் பின் கடலில் வீசி எறியப்பட்டது. பின்னர் மனம் திருந்திய அவர்கள் சிலையை மீட்டு மறுபடியும் 1653-ல் சிலையை ஸ்தாபிதம் செய்தனர். அதனால் கோவில் மறுபடியும் 17-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்பது அடுக்குகளைக் கொண்ட ராஜ கோபுரம் நம்மை அசர வைக்கிறது. கிழக்கிலும் வடக்கிலும் கடல் சூழ்ந்துள்ளதால் கோபுரம் மேற்குத் திசை நோக்கி உள்ளது. இன்னொரு காரணம் ராஜ கோபுரத்தின் அடித்தளம் கடினமான பாறைகளாலானது. மூலவர், கிழக்குத் திசை நோக்கி அருள் வழங்குகிறார். இந்த மேலைக் கோபுரம் எப்போதும் மூடியே இருக்கும். நாம் தெற்குப் புற வாயில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். மேலைக் கோபுரத்திலிருந்து 22 படிகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். விசேஷ நாட்களன்று காவடி மற்றும் பால் குடம் தூக்கும் பக்தர்கள் உன்மத்த நிலையில் இருக்கும்போது இது ஏதுவாக இருக்காது என்பதாலும் இந்த வாயில் மூடப்பட்டுள்ளது. இந்த ராஜ கோபுரம் ஒடுக்கத் தம்புரான் என்பவரால் கட்டப்பட்டது. ஒன்பது நிலைகளுடைய இந்தக் கோபுரம் யாழி மட்டத்திலிருந்து 137 அடி உயரமுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் புராண வரலாறுகள் சுதை உருவங்களாய் பொருத்தப்பட்டுள்ளன. கோபுரத்திற்கு மேல் ஒன்பது கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கே கலை ஆர்வத்தைத் தூண்டும் மணி மண்டபங்கள் நிறைய உள்ளன. மேலை கோபுரத்திற்கு எதிரே அழகிய வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்ட திருக்கல்யாண மண்டபம் உள்ளது. இதற்கு மேற்கே வசந்த மண்டபம் உள்ளது. இதில் 120 தூண்கள் உள்ளன. வசந்த விழாவின்போது இங்குதான் ஆறுமுகப் பெருமான் எழுந்தருள்வார் . அடுத்து வருவது ஷண்முக விலாசம். சிற்பங்களுடைய 124 தூண்களைக் கொண்டது. 120 அடி நீளமும் 80 அடி அகலமும் உள்ளது. இதன் வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும்.
சீபலி மண்டபம் வெளிப் பிராகாரத்தில் உள்ளது. இதன் சுவற்றில் சூர சம்ஹாரக் கதையைச் சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் தூண்களை யானை உருவங்கள் தாங்குவதால் ஐராவத மண்டபம் என்ற பெயரும் இதற்கு உண்டு. இதற்கு வட புறத்தில் 108 மஹா தேவரை தரிசிக்கலாம். ஒரு பெரிய லிங்கத்தின் மேல் 108 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வைக்கத்தப்பன் என்ற பெயரும் உள்ளது. பிரதி மாதம் கார்த்திகை நாளன்று 108 திருவிளக்கு பூஜை இவருக்கு முன் நடைபெறும்.
இரண்டாம் பிரகாரத்தில் மகாதேவருக்குத் தெற்கே சித்தி விநாயகர் உள்ளார். வடக்கே சுவரில் முருகன், சூரன் மீது வேல் எறியும் கற்சிலையைக் காணலாம். சூரன் புடைப்புச் சிற்பம் உப்புச் சாவடியில் (bas relief) உள்ளது. சுற்றாலையில் வட பகுதியில் வேங்கடாசலப் பெருமாள் கோவில் உள்ளது. இது தொன்மை வாய்ந்தது. பாண்டியர் குடவரைக் கோவில் மணற் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகுச் சிலைகள் எவர் மனதையும் லயிக்கச் செய்துவிடும். இங்கு பெருமாள் குருவாயூரப்பன் போல் காட்சி தருகிறான். கிழக்குப் பகுதியில் கொடி மரமும் கம்பத்தடி விநாயகரும் உள்ளனர். முதல் சுற்றாலையில் குமரவிடங்கர், வள்ளியம்மன், 63 நாயன்மார்கள், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
இந்தப் பிராகாரத்திலேயே பரிவார தேவதைகளுக்குகுரிய பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கிழக்குப் பகுதியில் மயூரநாதர் சந்நிதி உள்ளது. அடுத்து சண்டிகேஸ்வரர். பின் நடராஜர் கோவில், சனீஸ்வரர் உள்ளனர். நவக்கிரகங்களுக்கு இங்கே சிலைகள் இல்லை. மகாபலி பீடத்திலிருந்து கருவறையை நோக்கிச் சென்றால் மகா மண்டபத்தை அடையலாம். மூவர் முன்புள்ள இரும்புக் கம்பிகளால் தடுக்கப் பெற்ற இடம் ‘மணியடி' எனப்படும். மணியடியில் பார்வதி அம்மன், கரிய மாணிக்க விநாயகர், வீரபாகு, வீரமகேந்திரர் திருவுருவங்களைக் காணலாம்.
இக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் விசேஷமாகக் கருதப்படுவது இலை விபூதி. இது காச நோய்க்குக் கை கண்ட மருந்து என்ற நம்பிக்கை உள்ளது. பன்னீர் மரத்தின் இலைகளில் 12 நரம்புகளுள்ள இலைகளைத் தேர்ந்தேடுத்து அதனுள் விபூதியை மடித்துக் கட்டி விநியோகிக்கப்படுகிறது.