ஆன்மிகம்

அம்மன்குடி அழகிய தேவி

ராஜேஸ்வரி

மகிஷாசுரனை வதம் செய்தபின் அன்னை துர்க்கா தேவி, அசுர சம்கார தோஷம் நீங்க சிவதியானத்தில் ஈடுபட்டாள். அந்தத் தவம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீண்டது. சிவதரிசனத்தால் தவம் நிறைவு பெற, தான் தவம் செய்த அதே இடத்தில், தனக்குக் காட்சி அளித்த பார்வதி உடனுறை கைலாயநாதரை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தாள் துர்க்கா தேவி. இந்தத் தலமே தேவி தபோவனம் என்ற அம்மன்குடி. இந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் அருகில் உள்ளது. துர்க்கா தேவி இந்த ஆலயத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் துர்க்கா பரமேஸ்வரி என்ற திருநாமத்துடன் அருளாட்சி செய்துவருகிறாள். ஸ்ரீதேவி தரிசனத்தால், பாவம் ஒழிந்து அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன என்பது ஐதீகம். தற்போது இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. நவகிரகங்களுக்கு அதிதேவதையாக ஸ்ரீதுர்க்கையே விளங்குவதால், இங்கு நவகிரகங்களுக்குத் தனிச்சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT