ஆன்மிகம்

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை; கந்தசஷ்டி கவசம் சொல்லி கந்தனைக் கும்பிடுவோம்!  

வி. ராம்ஜி

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில், சக்தி அம்பிகையையும் அவளின் மைந்தன் முருகப் பெருமானையும் மனதார வழிபடுங்கள். அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து அருளும்பொருளுமாக வழங்குவார்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தனை வணங்குவோம்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அம்பாளுக்கும் கந்தபெருமானுக்கும் உரிய நாட்கள். இந்தநாளில், சக்தியையும் சக்தி மைந்தனான முருகக் கடவுளையும் ஒருசேர வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமை என்பதை ஆகாத நாள் என்று சிலர் சொல்லுவார்கள். செவ்வாய்க்கிழமையில் புதுப்புடவை கட்டுவதோ புதிய காரியத்தில் ஈடுபடுவதோ செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் அப்படியில்லை.

செவ்வாய் பகவானுக்கு உரிய நாள்தான் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்றே சொல்லுவார்கள். செவ்வாய் பகவானை, மங்கலகாரகன் என்றுதான் அழைப்பார்கள். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். எனவே, மங்கல வாரம் என்று சொல்லப்படும் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய்க்கு அதிபதியான முருகக் கடவுளை வணங்கித் தொழுதால், எல்லா காரியங்களும் வெற்றியாகும். எனவே செவ்வாய்க்கிழமை பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையுமே விசேஷம் எனும் போது, ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை ரொம்பவே மகிமை மிக்கது.

ஆடிமாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நாளைய தினம் (21.7.2020). இந்த செவ்வாய்க்கிழமையில், முருகப்பெருமானை விளக்கேற்றி வழிபடுவோம். முருகக் கடவுளுக்கு செந்நிற மலர்கள் சார்த்தி அலங்கரிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.

முருகனுக்கு உகந்தது எலுமிச்சை சாதம். எனவே நைவேத்தியமாக, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேலவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்வோம். மங்கல வாழ்வு தந்திடுவான். மங்காத செல்வம் அளித்திடுவான்.

அதேபோல், ஆடிச் செவ்வாய்க்கிழமையில், அம்பாள் வழிபாடு சக்தியைக் கொடுக்கக் கூடியது. அம்பாள் படங்களுக்கு அரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டுங்கள். விளக்கேற்றுவோம். அம்பாள் துதியைச் சொல்லுவோம். துர்கையின் அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவோம்.

கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்வாள் அம்பிகை. துக்கத்தையெல்லாம் போக்கியருள்வாள் தேவி. மனக்குழப்பத்தில் இருந்து விடுவித்து அருளுவாள் மகாசக்தி. இதுவரை தடைப்பட்டுக்கொண்டிருந்த பொருள்சேர்க்கையை நிகழ்த்தித் தந்தருள்வாள் அன்னை.
ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையில், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உயர்த்திவிடும் கந்தபெருமானையும் சக்தியை வழங்கி, வாழ்வில் ஏற்றம் தரும் மகாசக்தியையும் வழிபடுவோம்.

SCROLL FOR NEXT