ஆடி அமாவாசையானது திங்கட்கிழமையில் வருவது இன்னும் சிறப்பானது. நாளைய தினம் ஆடி அமாவாசை (20.7.2020). சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வருகிறது. எனவே, ஆடி அமாவாசையில் முன்னோரையும் சிவபெருமானையும் வழிபடுங்கள். வாழ்க்கையே வளமாகும். தலைமுறை கடந்தும் புண்ணியம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அம்மனுக்கு உகந்தது ஆடி மாதம். இந்த மாதத்தில், தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் அமாவாசை. இந்த நாளில், முன்னோர் வழிபாடு மிக மிக அவசியம்.
நாளைய தினத்தில், அமாவாசையில், தர்ப்பணம் செய்து வழிபடுங்கள். முன்னோர்களின் படத்துக்கு பூக்களிட்டு வேண்டிக்கொள்ளுங்கள்.
சோம வாரம் என்று திங்கட்கிழமையைச் சொல்லுவார்கள். சோமன் என்றால் சந்திரன். சந்திரனைப் பிறையாக அணிந்திருப்பவர் சிவபெருமான். சந்திரன் மனோகாரகன். நம் மனங்களை ஆள்பவன். அமாவாசை முதலான தர்ப்பண காரியங்களை, காசி, ராமேஸ்வரம் முதலான சிவ ஸ்தலங்களில் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.
மேலும் நாம் செய்யும் தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களால் நம் பித்ருக்களுக்கும் புண்ணியம் தந்தருள்வார் சிவனார். நமக்கும் நம் சந்ததியினருக்கும் புண்ணியப் பலன்களைத் தந்தருள்வார் சிவபெருமான்.
ஆடி அமாவாசையில், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையின் அமாவாசையில், மறக்காமல் பித்ரு காரிய தர்ப்பணங்களைச் செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி,முன்னோர் படங்களுக்கும் சிவனாரின் படங்களுக்கும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள்.
சிவனாரிடம் உங்கள் மனதில் உள்ள கஷ்டங்களையெல்லாம் கவலைகளையெல்லாம் முறையிடுங்கள். அவற்றையெல்லாம் முன்னோர் எனப்படும் பித்ருக்களும் சிவனாருமாக உங்கள் துக்கங்களையெல்லாம் போக்கி அருள்வார்கள்.
மனோகாரகன் எனப்படும் சந்திரனையே சூடிக்கொண்டிருக்கும் சிவனார், நம் சோகங்களையும் நம் வாழ்வில் உண்டான தடைகளையும் தகர்த்து அருளுவார். சந்திர பகவானின் பேரருளையும் பெறலாம்.
ஆடி அமாவாசை... சோம வார அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வதால், முன்னோர் ஆசியும் கிடைக்கும். சந்திர கிரக தோஷங்களும் விலகும். சிவனாரின் அருளையும் பெறலாம்.