பிரதிநிதித்துவப் படம் 
ஆன்மிகம்

ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதம் கிடையாது; மாநகராட்சி அறிவிப்பு; மீறி வருவோர் மீது நடவடிக்கை

ஜெ.ஞானசேகர்

திருச்சியில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதம் தொடர்பான பூஜைகள் நடைபெறாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் நதிக் கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். குறிப்பாக, ஆடி அமாவாசை நாளில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உட்பட காவிரியாற்றின் கரையோரங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதேபோல், தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18-ம் தேதி, ஆடிப் பெருக்கு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவைகளை வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி, ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொள்வர். மேலும், புதுமணத் தம்பதிகளும் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டு, திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டுச் செல்வர். இதுமட்டுமின்றி ஆண்கள், பெண்கள் பலரும் புதிய மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வர்.

இந்தநிலையில், கரோனா பரவல் திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொது ஊரடங்கு நாட்கள் மற்றும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதம் தொடர்பான பூஜைகள் நடைபெறாது என்று மாநகராட்சி, காவல்துறை மற்றும் ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்கம் சார்பில் அம்மா மண்டபத்தில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆடி அமாவாசை நாளான ஜூலை 20 (நாளை), பொது ஊரடங்கு நாளான ஜூலை 26, ஆடிப் பெருக்கு நாளான ஆக.2, ஆடி 28-ம் பெருக்கு நாளான ஆக.28 ஆகிய நாட்களில் அம்மா மண்டபம் படித்துறைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, "வழக்கமாக ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் அம்மா மண்டபம் படித்துறையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக அமர்ந்து வழிபாடு நடத்துவர். கரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், பரவலைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநகராட்சியின் அறிவிப்பை மீறி அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT