ஆன்மிகம்

ஆடிச்செவ்வாயில்... வயது முதிர்ந்த தம்பதிக்கு புடவை, வேஷ்டி; மஞ்சள் அட்சதை ஆசியால் மங்கல காரியங்கள்! 

செய்திப்பிரிவு

ஆடி மாதச் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புடவையும் வேஷ்டியும் வழங்கி, மஞ்சள் அட்சதையால் ஆசி பெறுங்கள். உங்கள் குடும்பத்தை இன்னும் மேன்மைப்படுத்தும். அந்த ஆசீர்வாதத்தால் நிம்மதியும் அமைதியும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளும் வெள்ளிக்கிழமைகளும் அம்பாளுக்கு உரிய சிறந்த நாட்கள் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால், அதாவது தட்சிணாயன காலம் என்கிற பெருமையும் சேருவதால் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஆடி மாதத்தில் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மற்ற மாதங்களில் வரும் செவ்வாய், வெள்ளியில் அம்பாளை வழிபடுவதை விட, இந்த நாட்களில், மறக்காமல் அம்பாளை வழிபடுவது ரொம்பவே நன்மைகளை வாரி வழங்கும்.

ஆடிச் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் வீட்டில் வாசலில் மாவிலையும் வேப்பிலையும் கலந்த தோரணங்களைக் கட்டுங்கள். அம்பாள் ஸ்லோகம் சொல்லி வழிபடுங்கள். மஞ்சளும் அரிசியும் கலந்து அட்சதை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடலைப் பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சிறியவர்களுக்கும் அம்பாளை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். பின்னர் வீட்டுப் பெரியவர்களிடம் நமஸ்காரம் செய்து, அம்பாள் முன்னே வைத்திருந்த மஞ்சள் அட்சதையை பெரியவர்களிடம் கொடுத்து ஆசி பெறுங்கள்.

அதேபோல், வயதான முதிர்ந்த தம்பதியிடம் நமஸ்கரித்து ஆசி வாங்குவதும் தம்பதி இடையே ஒற்றுமையை பலப்படுத்தும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வீட்டில் பெரியவர்கள், முதிர்ந்த தம்பதி இல்லையென்றாலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆசி பெறலாம். முடிந்தால், அவர்களுக்கு புடவை, வேஷ்டி கொடுத்து ஆசீர்வாதம் பெறுங்கள். வீட்டில் பல வருடங்களாக தடையுடன் இருந்த திருமணம் முதலான வைபவங்கள் விரைவிலேயே நிகழும் என்பது ஐதீகம்.

SCROLL FOR NEXT