தாம் என்ன விரும்புகிறோமோ அந்த உணவை, பொருளை தானமாக வழங்கச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல் அடுத்தவரின் தேவையை அறிந்து அதைத் தானமாக வழங்கி, அவர்களை மகிழ்விக்கச் சொல்லி வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
தானம் செய்யச் செய்ய, வாங்குபவரின் மனம் நெகிழும். நம்மை ஆசீர்வதிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல, நம் முன்னோர்களை நினைத்து செய்யப்படுகிற தானங்கள், மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். முன்னோர்கள் குளிர்ந்து போய், நம்மையும் நம் வம்சத்தையும் ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.
இன்னொரு விஷயம்... தான தர்ம காரியங்களைச் செயலாற்றுவதற்கென்றும் நெறிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை முறைப்படி புரிந்து உணர்ந்து தரும காரியங்களில் ஈடுபட்டால், உரிய புண்ணியங்களை அடையலாம்.
தானத்துக்கும் தர்மத்துக்கும் என்ன வித்தியாசம்?
நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களாகட்டும், அல்லது சமநிலையில் இருப்பவர்களாகட்டும்... அப்படிப்பட்டவர்களுக்கு மனம் கனிந்து நாம் கொடுக்கிற எதுவுமே தானம் எனும் நிலையில் வரும். அதேபோல, நம்மை விட குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு நாம் தருபவை எல்லாமே தர்மம் எனப்படும் என்று விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தானம் செய்யவும் தருமங்கள் செய்யவும் இந்தநாளில்தான் கொடுக்கவேண்டுமா என்பது பலரின் சந்தேகமாகவும் இருக்கிறது. தானம் செய்ய நாளும் கோளும் அவசியமில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தான தருமங்கள் செய்வதற்கு, பகலாக இருப்பதோ இரவு நேரமாக இருப்பதோ முக்கியமில்லை. நல்லநாள் பெரியநாள் என்பதெல்லாம் அவசியமே இல்லை. அதேசமயம், இப்படிப்பட்ட காரியங்களை, சூரிய வெளிச்சம் படர்ந்திருக்கும் பகல் வேளையில் கொடுப்பதே உத்தமமானது என்றும் இதனால் கொடுப்பவருக்கு புண்ணியம் என்பது மட்டுமில்லாது பெற்றுக் கொள்பவர்களுக்கு செல்வம் சேரும், தரித்திரமும் பீடையும் விலகும் என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
சூரிய வெளிச்சத்தின் போது ஏன் கொடுக்கவேண்டும் என்பதற்கு இன்னொரு விளக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது நாம் செய்யும் தான தருமச் செயல்களையும் கொடுக்கப்படுகிற பொருட்களையும் சூரிய பகவான் சாட்சியாக இருந்து சகலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்யும் பாவத்துக்கும் புண்ணியத்துக்கும் அவர்தான் சாட்சியாக இருக்கிறார். எனவே பகலில் தான தருமங்கள் செய்ய வலியுறுத்துகிறார்கள்.
‘வீட்டில் விளக்கு வைச்சாச்சு. நாளைக்கித் தரேன்’ என்று சொல்லும் விஷயம் இதனால்தான் இப்படியாகத்தான் வந்திருக்கும் போல!
அதேசமயம், கிரகண காலம், முக்கியமாக சந்திர கிரகண காலம், திருமணம் முதலான விஷயங்கள், தமிழ் மாதப் பிறப்பு, அவசர ஆபத்து சம்பத்து காலம் முதலான தருணங்களில் எதுகுறித்தும் கவலைப்படாமல் தானங்கள் செய்யலாம் என அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக, வயதானவர்களுக்கு போர்வை, செருப்பு, குடை முதலானவை வழங்கலாம். தெருவோரம் வசிப்பவர்களுக்கு போர்வை, பாய், குடம், ஆடைகள் வழங்கலாம். திருமணம் நடக்க இருக்கும் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு முடிந்த அளவு தங்கம், தாலியில் கோர்க்கப்படுகிற காசு ஆகியவற்றை வழங்கலாம்.
ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவலாம். நோட்டுப் புத்தகங்கள், பேனா, பள்ளிச்சீருடை வழங்கி உதவலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.