கர்வம் எப்போதுமே சத்ரு. எல்லோருக்குமே சத்ரு. கர்வத்தில் ஆடினால், கடவுளே வந்து பாடம் புகட்டுவார் என்பார்கள்.
தாருகாவனத்து ரிஷிகளும் அப்படித்தான் கர்வத்தின் தலைகால் புரியாமல் ஆடினார்கள். ஆனானப்பட்ட பிரம்மாவும் மகாவிஷ்ணுவுமே சிவனாரின் தலையையும் காலையும் அடையமுடியாமல், அடியையும் முடியையும் தொட முடியாமல் இருந்தபோது, இந்த ரிஷிகளெல்லாம் எம்மாத்திரம்?
உண்மையான பக்தி இருக்கும் இடத்திலும் தன்னையே தான் பெருமையாக கருதி கர்வ அலட்டலுடன் இருப்பவரிடத்திலும் கடவுள் ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து தன் விளையாடலைச் செய்வார்.
தாருகாவனத்து ரிஷிகளிடம் பிட்சாடனராக வந்து பாடம் புகட்டினார் சிவனார். கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்தனர். தங்கள் பாவத்துக்கு விமோசனம் கேட்டு மனமுருகி வேண்டினர். சிவபெருமானும் அவர்களுக்கு விமோசனம் அளித்தார் என்கிறது புராணம்.
அதனால்தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆச்சார்யர்கள்ள் தெரிவிக்கின்றனர். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது என்கிறார்கள்.
சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.
பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.
சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.
நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.
இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, ‘நமசிவாயம்’ என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.
இன்று (18ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!