ஆன்மிகம்

மஞ்சள் பிள்ளையார், ஆண்டாள் பிறப்பு, அம்மனின் தவம், வளையல் பிரசாதம்! - ஆடி ஸ்பெஷல்

வி. ராம்ஜி

உமையவள் தவமிருந்தது, ஆண்டாள் அவதரித்தது, ஹயக்ரீவர் அவதாரம், வரலக்ஷ்மி விரதம், நிகழ்ந்தது உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் ஆடி மாதத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன என விவரிக்கிறது புராணம். ஆடி மாதத்தில்தான் ஆடிப்பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு என கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரத் திருநாள்தான், ஆண்டாள் பிறந்தநாள். அன்றைய நாளில், ஆண்டாள் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துர் உள்ளிட்ட வைணவத் தலங்களில், ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். நாச்சியார் திருமொழி பாடியும் திருப்பாவை பாடியும் ஆண்டாளை வழிபடுவார்கள் பக்தர்கள். அப்போது, ஆண்டாளை வழிபட்டால், உங்களின் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் சாற்றி வழிபடுவது வழக்கம். அந்த வளையல்களை கன்னிப் பெண்கள் அணிந்துகொண்டால், விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகள் அம்மனுக்கு அணிவித்த வளையலை அணிந்து கொண்டு பிரார்த்தித்தால், சுகபிரசவம் நிகழும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிடுங்கள். முதல்நாளே, பூஜையறையைச் சுத்தம் செய்துவிடுங்கள். வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் குளித்துவிட்டு, சாணத்தைக் கொண்டு பிள்ளையாராகப் பிடித்துவையுங்கள். மஞ்சளிலும் பிள்ளையார் பிடித்து வைக்கலாம்.

செவ்வரளிப்பூ, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பூஜையைத் தொடங்குங்கள். சூர்ய உதயத்திற்கு முன்னதாக இந்தப் பூஜையைச்செய்வது விசேஷம். பிள்ளையாருக்கு அருகில், வாழை இலையில் நெல் பரப்பிவைத்துக்கொள்ளலாம். அல்லது அரிசியையும் வைக்கலாம். அதன் மேலே கொழுக்கட்டைகள் வைத்து நைவேத்தியம் செய்து, கணபதியை வழிபட கவலைகள் பறந்தோடும். விக்னேஸ்வரரை வணங்கினால், விக்னங்கள் அனைத்தும் தீரும்.

ஆடி மாதத்தைப் பற்றி இன்னொரு கருத்தும் சொல்லுவார்கள். அதாவது ஆடி மாதம் பீடை மாதம் என்று சொல்லுவார்கள். அதனால், இந்த மாதத்தில், நல்ல காரியங்களைச் செய்யாமல் ஒதுக்குவார்கள். ஆனால் ஆடி மாதம் பீடை மாதம் இல்லை. பீட மாதம். அதாவது, வழிபடுவதற்கு உகந்த மாதம். அதாவது, அம்பிகையை, மனதை பீடமாக்கி வழிபடும் மாதம். அந்த மன பீடத்தில் அவளை அமர்த்தி அவளையே நினைந்து, மனதார வேண்டிக்கொண்டிருக்கிற மாதம். பீட மாதம் என்பதுதான் பின்னாளில் பீடை மாதம் என அறியாமல் சொல்லப்பட்டு, அதுவே காலம் கடந்தும் புரியாமல் இருந்து வருகிறது.

ஆடி பெளர்ணமி ரொம்பவே விசேஷமானது. சில ஆலயங்களில் அன்றைக்கு சிவலிங்கத்திருமேனிக்கு திரட்டுப்பால் அபிஷேகம் நடைபெறும். அன்றைய நாளில், வீட்டில் சிவனாருக்கு பால் கொண்டு நைவேத்தியம் செய்து வழிபடுவது, நல்ல நல்ல பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

மனதைத் தெளிவாக்கும் உன்னதமான ஆடி மாதத்தில், அம்பிகையை வணங்குவோம். மனதில் ஆன்மிக எண்ணங்களை வளர்ப்போம். நமக்குள்ளேயும் நம்மைச் சுற்றிலும் நல்ல நல்ல அதிர்வுகள் சூழ்ந்து நம்மை இன்னும் காத்தருளும்!

SCROLL FOR NEXT