கந்தனை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது முதுமொழி. ’யாமிருக்க பயமேன்’ என்றுதான் முருகப்பெருமான் சொல்லி அருள்கிறார் என்று புராணங்களும் விவரிக்கின்றன. எந்த நிலையிலும் எப்பேர்ப்பட்ட நெருக்கடியிலும் முருகக் கடவுளை வணங்கி வழிபட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் என்கிறார்கள் முருக பக்தர்கள்.
முருகப்பெருமானை, தமிழ்க்கடவுள் என்று கொண்டாடுகிறார்கள் ஆச்சார்யர்கள். பிள்ளையார் வழிபாடும் அவனுடைய தம்பியான வெற்றிவேலனின் வழிபாடும் மிக மிக எளிமையானவை. அதேபோல், முருகனுக்கான வழிபாட்டு முறைகளும் நிறையவே இருக்கின்றன. முருகனுக்கு காவடி எடுப்பதும் பால் குடம் ஏந்தி வருவதும் கிராமப் புறங்களில் கோலாகலமாக நடைபெறுகின்ற விழாக்கள்.
இதேபோல், 150 வருடங்களுக்கு முன்னதாகவே முருகனை வணங்குவதற்கு, பாதயாத்திரையாகச் சென்றது தொடங்கியிருக்கிறது. இன்றைக்கும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடு திருத்தலங்களுக்கும் தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை கந்தசஷ்டி முதலான வைபவங்களின் போது பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இருக்கிறார்கள்.
செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
இதேபோல, கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லெளம் ஸெளம் நமஹ
எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.
தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.
தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கந்தனை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் சொல்லுவோம். கஷ்டங்கள் போக்கி அருள்பொழிவான் கந்தகுமாரன்.