ஆன்மிகம்

துக்கமெல்லாம் தீர்க்கும் துர்கா ஸ்லோகம்; இன்னல் தீர்க்கும் எலுமிச்சை தீப வழிபாடு! 

வி. ராம்ஜி

தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்வது துர்கை ரூபம் என்கிறது புராணம். அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.
ஆலயத்தில், கோஷ்டத்தில் பிராகாரமாக வலம் வந்து துர்கையை வழிபடவேண்டும். துர்கை எப்போதுமே ஆக்ரோஷ நாயகிதான். அதேசமயம், தீயவர்களிடம் மட்டுமே தன் கோபத்தைக் காட்டுவாள். தன்னைச் சரணடைவோருக்கு எப்போதும் அரணனாகத் திகழ்வாள்.

தேவர்களையும் ரிஷிகள் பெருமக்களையும் அழிப்பதற்காக, ஆயிரம் அக்ரோணி சேனைகளுடன் பலம் பொருந்திய தளபதிகளுடன் படையெடுத்தான் துர்கமன் எனும் அரக்கன். இதைக் கண்டு கதறிக் கலங்கினார்கள் தேவர்கள். தவித்து மருகியவர்கள் அம்பிகையை, பராசக்தியை சரணடைந்தார்கள்.

தேவர்களையும் ரிஷிகளையும் ஓரிடத்தில் வைத்து, அவர்களைச் சுற்றி அக்னி மண்டலத்தை உருவாக்கினாள். அவர்களைப் பாதுகாத்தாள்.

அடுத்து, துர்கமனை அழிக்கப் புறப்பட்டாள் தேவி. ஐந்து பாணங்கள் புறப்பட்டுத் துளைக்கும் அம்பை எய்தினாள். அவனுடைய உடலிலிருந்து பஞ்சப் பிராணனும் வெளியே வந்தது. செத்தொழிந்தான் துர்கமாசுரன்.

அவன் உடலிலிருந்து வந்த மந்திரங்கள் பேரொளியாக தகதகத்தன. அவை லோகநாயகியான பராசக்தியினுள்ளே பிரவேசித்தன. இதனால் அம்பாளுக்கு சர்வ மந்திரமயீ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

துர்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். துர்கை என்றால் கோட்டையின் நாயகி என்று அர்த்தம். துர்கமன் எனும் அசுரனை அழித்த்து, துக்கங்களையெல்லாம் போக்கியவள் என்பதால், அம்பிகைக்கு துர்கை எனும் திருநாமம் அமைந்ததாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துர்கையை வழிபடுவதும் அவளின் ஸ்லோகத்தைச் சொல்லி அவளை ஆராதிப்பதும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மந்த்ரராசிஸ்து யோ தைத்யே பூர்வமாசீத் வராஹ்ருதஹ
ஸ ஏவ தேஜோ ரூபேண தேவிதேஹே விவேச ஹ
சர்வ மந்த்ரமயீ தஸ்மாத் துர்கா தேவி பிரகீர்த்திதா
துர்காமாசுர சம்ஹார காரணாத் யுதி ஸா சுரைஹி

எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, துர்காதேவியை ஆராதித்து வழிபட்டால், நம்மையும் நம் இல்லத்தையும் துஷ்ட சக்திகளிடமிருந்து காத்தருள்வாள் அன்னை என்கிறார் மீனாட்சிசுந்தர குருக்கள்.

செவ்வாயும் வெள்ளியும் துர்கையை வழிபட உகந்தநாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கையை வணங்குவதும் விளக்கேற்றுவதும் துர்காதேவியின் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதும் நல்லனவற்றையெல்லாம் வழங்கும். வீட்டில் தடைகளையெல்லாம் தகர்த்துவிடும். தீயசக்திகளை அழித்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை ராகுகால நேரம் என்பது மாலை 3 முதல் 4.30 மணி வரை. இந்த வேளையில், வீட்டில் விளக்கேற்றுங்கள். துர்கையை நினைத்து, அவளின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். எலுமிச்சை தீபம் அல்லது நெய் தீபமேற்றுங்கள். அம்பாளின் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். மாங்கல்ய வரம் தருவாள். மாங்கல்ய பலம் காப்பாள்.

வீட்டில் நீண்டகாலமாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த மங்கல காரியங்களை நடத்தித் தந்தருள்வாள் துர்காதேவி.

SCROLL FOR NEXT