பொது முடக்கத்தால் கோயில்கள் அடைக்கப்பட்டு இருப்பதால் ஆன்மிக நாட்டம் உள்ளவர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். இணைய வசதி படைத்தவர்கள் அவ்வப்போது யூடியூப் சேனல்கள் வழியாக ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டுத் திருப்தி கொண்டாலும் பலருக்கும் அத்தகைய சொற்பொழிவுகளை நேரலையில் கண்டு மகிழ்ந்த திருப்தி கிடைப்பதில்லை. அவர்களுக்காகவே, இணைய வழியில் சைவ சிந்தாந்த உரைகள் மற்றும் திருவாசக முற்றோதல் உள்ளிட்ட சொற்பொழிவுகளை வழங்கி வருகிறது திருவாவடுதுறை ஆதீனம்.
இதன்படி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சைவ சித்தாந்த உரை தொடர்ந்து நிகழ்த்தப்பெற்று வருகிறது. அதன்படி வரும் 16-ம் தேதி வியாழன் மாலை 7 முதல் 8 மணி வரை இந்த உரை நிகழ்த்தப்பட உள்ளது. கூகுள் மீட் செயலி வழியாக இந்தச் சொற்பொழிவில் யார் வேண்டுமானாலும் எளிதாகக் கலந்து கொள்ளலாம்.
செயலியை https://meet.google.com/kin-jmuz-pog என்ற முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். தனி பாஸ்வேர்டு தேவையில்லை. அதிலுள்ள மீட் ஜாயின் மூலம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். மாலை 6 .15 மணிக்கு லிங்க் திறக்கப்படும். இந்த வார உரையில் சிவஞானபோதம்- நூற்பா 3 குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. நெய்வேலியைச் சேர்ந்த பேராசிரியர் சிவகண முருகப்பன் சொற்பொழிவை நிகழ்த்துகிறார்.
அதேபோல நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதோடு அல்லாமல் பாட விரும்புகிறவர்கள் பாடவும் செய்யலாம். 94436 66709 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்தால் நீங்கள் தெரிவித்த பாடல்களில் ஒரு பதிகம் நீங்கள் பாடுவதற்காக ஒதுக்கப்படும்.
வைஃபை இணைப்பு இருப்பவர்கள் முழுவதும் கலந்து கொள்ளலாம். மொபைல் டேட்டா குறைவாக இருப்பவர்கள் தொடக்கத்திலும் தாங்கள் பாடும் நேரத்திலும், பின்னர் நிறைவிலும் இணைந்து கொள்ளலாம். இணைப்பில் இல்லாத நிலையில் தாங்கள் இல்லத்தில் படித்துக் கொண்டிருக்கலாம் என்ன பதிகம், யார் பாடுவது என்பது குறித்து முதல் நாள் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.