சஷ்டியில் முருகப்பெருமானை வணங்குவோம். நம் கஷ்டமெல்லாம் பறந்தோடச் செய்வான் வேலவன்.
முருகப்பெருமானை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் ஏராளாமான முக்கியமான தினங்கள் இருக்கின்றன. வாரந்தோறும் வருகிற செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் முருகக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரமும் பங்குனியில் உத்திரமும் கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திர நன்னாளும் கந்தப்பெருமானை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாட்கள்.
சூரத்தனத்தையும் சூரர்களையும் அழிப்பதற்குத்தான் முருகப் பிறப்பு என்கிறது புராணம். கெட்டதையும் தீயசக்தியையும் அழிப்பதற்குத்தான் அவனுடைய பிறப்பு நிகழ்ந்ததாக விவரிக்கிறது கந்த புராணம்.
ஆறுபடை வீடுகளின் நாயகன் முருகப் பெருமானை வணங்கினால், வீடுபேறு நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள். குன்றுதோறும் இருக்கிற குமரக்கடவுளை வணங்கினால், நம் வாழ்வை உயர்த்திவிடுவான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தமிழ்க்கடவுள் என்று கொண்டாடப்படும் முருகப்பெருமானை, அவருக்கு உரிய நாளில், விரதம் இருந்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். முருகனுக்கு உகந்தது செந்நிற மலர்கள். எனவே அரளி முதலான மலர்கள் கொண்டு முருகப்பெருமானை அலங்கரிக்கலாம். அர்ச்சித்து வேண்டிக்கொள்ளலாம்.
இன்று சஷ்டி நன்னாள். வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது சிறப்புக்கு உரியதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆனி மாதத்தின் கடைசி சஷ்டி இன்று. மறக்காமல், முருகக் கடவுளுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆனி வெள்ளியில்... சஷ்டியில்... சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையை இனிக்கச் செய்து, உயர்த்தி அருளுவார் வெற்றிவேலன்.
நம் கஷ்டமெல்லாம் தீர்ப்பான், தடைகளையெல்லாம் தகர்ப்பான், ஞானத்தையெல்லாம் வழங்குவான் வள்ளி மணாளன்.