ஆன்மிகம்

வார ராசிபலன் 17-9-2015 முதல் 23-9-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 5-ல் சூரியனும் குருவும், 6-ல் ராகுவும் உலவுவதால் நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். எதிரிகள் குறைவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 8-ல் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல் சோர்வு ஏற்படும். மனதில் ஏதேனும் கவலை உண்டாகும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்லதொரு தகவல் வந்து சேரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். 18-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். எலட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 17, 21, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 6, 9. ‎

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் நலம் புரிய முன்வருவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபார வளர்ச்சி திட்டங்கள் கைகூடும். மாணவர்களது நிலை உயரும். மருத்துவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். அலைச்சல் சற்று கூடவே செய்யும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் சந்திராஷ்டமம் என்பதால் சிறு சிறு பிரச்சினைகள் சூழும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 17, 23 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7.

பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் செவ்வாயும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். முக மலர்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் அளவோடு நலம் ஏற்படும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பணப் புழக்கமுள்ள இடங்களில் தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி உறவு நிலை சீராகவே இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் வரும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : செப்டம்பர் 17, 21.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், மெரூன்.

எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் சூரியன் புதன் குருவும், 3-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 2-ல் இருந்தாலும் ஓரளவு நலம் புரிவார். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும்.

பெற்றோரால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் உல்லாசப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 17, 21, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சூரியன் பலம் பெற்றிருக்கிறார். சுக்கிரனும் சாதகமாக உலவுகிறார். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் நிலை உயரப் பெறுவார்கள். தந்தையால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எரிபொருட்களால் லாபம் கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் ஆதாயம் தரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். வீண்வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள், உறவினர்களால் மன அமைதி குறையும். தாய் நலனில் அக்கறை தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பதன் மூலம் உடல் அசதியைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 17, 21, 23.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வான்நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6.

பரிகாரம்: நாகராஜரை வழிபடவும். சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. பொருள்வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமை கூடும். பெண்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் ஓரளவு அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும்.

ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அரசாங்கத்தாராலும் தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் சங்கடங்கள் சூழும். அலைச்சல் அதிகமாகும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. அரசு தண்டனை மற்றும் அபராதம் கட்ட வேண்டிவரும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 17, 21, 23.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8.

பரிகாரம்: குரு, செவ்வாய்க்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. நாகர் வழிபாடும் முக்கியம்.

SCROLL FOR NEXT