சங்கடஹர சதுர்த்தி நன்னாளான இன்று, நம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் விநாயகரை வேண்டுவோம். அருகம்புல் சார்த்தி வழிபடுவோம்.
சிவனாருக்கு மகா சிவராத்திரி, பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் என அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில், உரிய முறையில் பூஜைகளும் வழிபாடுகளும் செய்வோம்.
முருகப்பெருமானுக்கு தைப்பூசமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகைப் பெருவிழாவும் பங்குனி உத்திரமும் வைகாசி மாதத்து விசாகமும் முக்கிய தினங்கள். அந்த நாளில், முருகக் கடவுளை விரதமிருந்து வணங்கி வழிபடுவோம்.
இவை எல்லாவற்றிலும் விநாயகர் வழிபாடு என்பதும் தரிசனம் என்பதும் முதலில் நடைபெறும். அதன் பிறகே அந்தந்த இறைத் திருமேனிகளை வழிபடுவோம். பூஜையோ ஹோமமோ செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். எந்தவொரு வழிபாட்டிலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வைத்து, பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
அத்தனை பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய பிள்ளையாருக்கு உகந்த நாள் விநாயக சதுர்த்தி. ஆனாலும் மாதந்தோறும் சதுர்த்தி வரும். அதை சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகிறோம்.
சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வழிபடுவது ரொம்பவே விசேஷம். நம் விக்னங்களையெல்லாம் அழித்து அருள் செய்யும் ஆனைமுகனை இந்த நாளில் வழிபடுவது பலமும் வளமும் சேர்க்கும்.
வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். விநாயகர் திருவுருவப் படத்தை தூய்மைப்படுத்தி சந்தனம் குங்குமமிடுங்கள். அருகம்புல் சார்த்துங்கள். விநாயகருக்கு ரொம்பவே இஷ்டமான கொழுக்கட்டை அல்லது பாயசம் அல்லது சுண்டல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
இன்று (ஜூலை 8ம் தேதி) சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில், பிள்ளையாரப்பனை மனதார வேண்டுவோம். மங்காத வாழ்வைப் பெறுவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து அருளுவார் ஆனைமுகத்தான்!