இழந்த பொருளை, செல்வத்தை, பதவியை, கெளரவத்தை சோளிங்கர் யோக நரசிம்மரும் யோக ஆஞ்சநேயரும் தந்தருள்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.
கடிகாசலம் என்று போற்றப்படும் திருத்தலம் சோளிங்கர். சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். சலம் என்றால் அசைவது. அசலம் என்றால் அசைவில்லாதது. மலை என்றுபொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன.
சோளிங்கர் மலையின் மீது இருந்தபடி இந்த வையத்து மனிதர்களையெல்லாம் வாழ அருளிக்கொண்டிருக்கிறார் நரசிம்மர். வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது பத்ம புராணம்.
ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீநாதமுனிகள் முதலானோர் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்தலப் பெருமையை அருளியுள்ளனர்.
நரசிம்ம அவதார மூர்த்தத்தை தரிசிக்கும் பேராவல் கொண்டு, விஸ்வாமித்திரர், சப்தரிஷிகள் முதலானோர் இங்கே, இந்த மலையில் கடும் தவம் மேற்கொண்டு, நரசிம்ம தரிசனம் செய்தார்கள் என்கிறது ஸ்தல புராணம்.
இன்னொரு புராணக் கதையும் உண்டு.
ராம அவதாரம் முடிவுக்கு வந்தது, ஸ்ரீராமர், வைகுந்தம் புறப்பட்டார். ‘நானும் வருகிறேன்’ என்றார் அனுமன். ‘கடிகாசலத்தில் சப்தரிஷிகள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னல் வரப்போகிறது. அந்த இன்னலை நிறுத்து. அவர்களின் தவம் கெடாமல் இருக்க உதவுவாயாக. பின்னர் வரலாம்’ என அருளினார்.
அதன்படி அனுமன், சோளிங்கர் மலைக்கு வந்தார். அங்கே, காலன், கேயன் எனும் அரக்கர்கள் சப்தரிஷிகளின் தவத்தைக் கலைக்கவும் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு, இம்சித்து வந்தார்கள்.
திருமாலை வேண்டினார் அனுமன். அவரின் சங்கு சக்கரங்களைப் பெற்றார். அரக்கர்களின் சிரசைக் கொய்து போட்டார். சப்தரிஷிகளின் தவத்துக்கு வந்த இடையூறு முடிவுக்கு வந்தது. பெருமாளும், நரசிம்ம மூர்த்த திருக்கோலத்தில் திருக்காட்சி அளித்து சேவை சாதித்தார். ’இந்தக் கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் இன்னல்களைப் போக்குவாயாக!’ என அருளினார். அதன்படி, சோளிங்கர் திருத்தலத்தில், திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி, ஜபமாலையை வைத்துக்கொண்டு, யோக அனுமனாக இங்கே தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். அரிதினும் அரிது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
சப்தரிஷிகளுக்கு நரசிம்மமாக திருக்காட்சி தந்ததாலும் யோக ஆஞ்சநேயராக அனுமன் இருப்பதாலும், இன்னும் மகத்துவம் நிறைந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது, சோளிங்கர் திருத்தலம். மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் எனும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது.
சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான மலை சோளிங்கர். இந்த மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் யோக நரசிம்மர். இதையடுத்து 500 படிகளேறினால், சின்னஞ்சிறிய மலையில், ராமபக்த அனுமன், யோக ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார்.
யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.