கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காகக் கரோனா விழிப்புணர்வுப் பிரசுரம் வழங்க கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள கிராமக் கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்குத் திறக்க பொது முடக்கத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கும்பகோணம் ஜோதி மலை இறைப்பணி திருக்கூட்டத்தார் பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர்.
பக்தர்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பிரசுரங்களில், ‘திருக்கோயில்களில் தரிசனத்தின்போது தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்போம்; கரோனாவை விரட்டுவோம். முகக்கவசம் அணிவோம்; முழுப் பாதுகாப்புடன் வாழ்வோம்’ என விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்தப் பிரசுரங்கள் ஒட்டப்பட்ட பதாகைகளை கும்பகோணம் பகுதியில் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ள கிராமக் கோயில்களில் பக்தர்களின் பார்வையில் படும்படி வைக்கவும் கூட்டத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.