ஆன்மிகம்

தங்கத்தொட்டில்; துலாபாரத்தில் குழந்தை; கரு காத்த தேவியை வேண்டுவோம்! 

வி. ராம்ஜி

தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சை மெலட்டூர், திட்டைக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே கண்கண்ட தெய்வமாக, கருணை வடிவம் கொண்ட அன்னையாகத் திகழ்கிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

சோழ தேசத்தின் தென்கரைத் திருத்தலங்களில் ஒன்று. வெட்டாறங்கரையில் அமைந்த அற்புதமான திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதலாவது திருத்தலம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்காக, பெண்களின் நலனுக்காக, பெண்களுக்கு கருவுற வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக... கோயில் கொண்டிருக்கிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

கரு தங்கவில்லையே என்று கலங்குபவர்கள், கரு கலைந்துவிட்டதே என்று துக்கித்திருப்போர், இந்தத் தலத்தின் அரசியை, லோகமாதாவை, கருகாத்த நாயகியை மனதார வேண்டிக்கொண்டால் போதும்... சுகப்பிரசவம் தந்தருள்வாள். பிள்ளை வரத்தைக் கொடுத்து மகிழச் செய்வாள் அம்பாள்.

கருவைக் காத்து வரும் ஊர். அதுவே கருக்காத்தவூர் என்றாகி பின்னர் கருகாவூர் என்றானது.

வேதிகை என்பவள், வயிற்றில் கரு உண்டாகியிருந்தாலும் முனிவரின் சாபம் ஒன்றால் கலைந்துவிடுமோ என்று கலங்கினாள். அவளின் துயரத்தைப் போக்கும் வகையில், அம்பாள்... அவளின் கர்ப்பத்தைக் காத்தாள். சிதைந்த கருவை ஒரு குடத்திலிட்டு காப்பாற்றியருளினாள். குழந்தை பிறந்தது என்கிறது ஸ்தல புராணம்.

இந்தத் தலத்து நாயகியை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேண்டிக்கொள்ளுங்கள். ஆலயத்தில் தங்கத் தொட்டில் உள்ளது. நல்லபடியாக குழந்தை பிறந்தால், குழந்தையை தங்கத் தொட்டிலில் வைத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவதாக வேண்டிக்கொள்ளுங்கள். குழந்தையையும் தாயையும் குடும்பத்தையும் காத்தருள்வாள் கர்ப்பரட்சாம்பிகை.

இதேபோல், துலாபார நேர்த்திக்கடனும் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் பிரசித்தம். நல்லபடியாக சுகப்பிரசவமாக வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள், குழந்தை பிறந்ததும் இங்கே திருக்கருகாவூருக்கு வந்து, துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தையின் எடைக்கு எடை கல்கண்டு, வாழைப்பழம் என ஏதேனும் பொருள் வைத்து துலாபாரம் செலுத்துவது வழக்கம்.

கருவுற்றிருப்பவர்கள், சுகப்பிரசவம் நிகழவேண்டும் என்றும் தங்கத் தொட்டிலில் குழந்தையை இடுவதாகவும் குழந்தையின் எடைக்கு எடை பொருள் தருவதாகவும் அல்லது திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகைக்கு, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு சுகப்பிரசவத்தை தந்தருள்வாள் அன்னை!

SCROLL FOR NEXT