அட்சயபுரீஸ்வரர் குடிகொண்டிருக்கும் கோயிலில் குடும்பத்துடன் காட்சி தருகிறார் சனீஸ்வரர். இவரை நினைத்து காகத்துக்கு உணவிடுங்கள்; இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள். பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பேராவூரணியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விளங்குளம். விளாங்குளம் என்றும் சொல்லுவார்கள். இங்கே கோயில் கொண்டுள்ள சிவனாரின் திருநாமம் அட்சயபுரீஸ்வரர்.
இந்தத் தலத்துக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரார்த்தித்தால், வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்தத் தலத்தின் முக்கியமான சிறப்பு... நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவான் இங்கே தனிச்சந்நிதியில் இருக்கிறார். அதுமட்டுமா? குடும்ப சமேதராக இருந்து கொண்டு, நம்மையும் நம் குடும்பத்தையும் செம்மைபட வாழச் செய்து அருள்கிறார் சனீஸ்வரர்.
இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது ஸ்தல புராணம்.
குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது ஸ்தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம். அல்லது வீட்டில் விளக்கேற்றி, ஆலயத்துக்கு 11 ரூபாய் எடுத்து, மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, பின்னர் ஆலயத்துக்குச் செல்லும் போது உண்டியலில் செலுத்தி வேண்டிக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயிலின் இன்னொரு மகத்துவம்.... இந்தத் தலத்து இறைவனை மனதார வேண்டிக்கொண்டால், பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் அமாவாசை தினங்களில், விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயிலில் குடிகொண்டிருக்கும் சனீஸ்வரரை நினைத்து காகத்துக்கு உணவிடுங்கள். இயலாதவர்களுக்கு உணவிடுங்கள். அட்சயபுரீஸ்வரரின் அருளையும் சனி பகவானின் அருளையும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.