ஆன்மிகம்

குருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்;  படியளக்கும் சிவனாரைப் பணிவோம்! 

வி. ராம்ஜி

வளர்பிறை தருணத்தில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷமும் இணைந்து வரும் இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். நம் குறைகளையும் பிரார்த்தனைகளையும் சொல்லி சிவனாரிடம் முறையிடுவோம். உலகுக்கே படியளக்கும் சிவன், உலக மக்களின் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்த்தருள்வார்.
சிவ வழிபாட்டுக்கு உரிய நாட்கள் பல உண்டு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவ வழிபாட்டுக்கு விசேஷமான நாள். தலையில் பிறையென சந்திரனை சூடிக் கொண்டிருப்பவருக்கு திங்களன்று வழிபாடு செய்வார்கள். இதை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சிவபெருமான் என்றும் பொருள் உண்டு.
அதேபோல் மாதந்தோறும் வரும் சிவராத்திரியும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியும் விசேஷம். இதனை மாசி மகா சிவராத்திரி என்று போற்றுகிறார்கள்.
இதேபோல், பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய மிக விசேஷமான தருணம். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம். இதனால்தான் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும், மாலை வேளையில் பிரதோஷ பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன.
இந்தநாளில், சிவனாருக்கு மட்டுமின்றி நந்திதேவருக்கும் அமர்க்களமாக பூஜைகள் நடைபெறுகின்றன. 16 வகையான அபிஷேகங்களும் ஆராதனைகளும் சிறப்புற நடைபெறுகின்றன.
பிரதோஷ நாளில், சிவராத்திரி போல் விரதம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று வியாழக்கிழமை. குரு வாரம். பிரதோஷம். வளர்பிறை காலமும் கூட. எனவே இந்தநாளில், குரு வார பிரதோஷ நன்னாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். தென்னாடுடைய சிவனை மனதார வேண்டுங்கள். உங்கள் குறைகளையும் உலக மக்களின் குறைகளையும் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உலகுக்கே படியளக்கும் சிவனார், நம் வாழ்க்கையின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தீர்த்தருள்வார்.
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

SCROLL FOR NEXT