ஆன்மிகம்

திருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்! 

செய்திப்பிரிவு


குடவாயில் என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டு, இன்றைக்கும் குடவாயில் என்றும் குடவாசல் என்று அழைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய ஸ்தலம் குடவாசல் திருத்தலம். இலக்கியத்திலும் சரித்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது குடவாசல். தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் அருகே உள்ள அற்புதமான திருத்தலம் இது.
தோரணவாயில், கோட்டைவாசல் என்றெல்லாம் இருக்கிறது. குடவாயில் திருத்தலத்துக்கு வந்து வணங்கினால், இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காத்தருள்வார் இந்தத் தலத்து ஈசன் என்கிறது ஸ்தல புராணம்.
குடவாயில் திருத்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள சிவ ஸ்தலங்களில் ஒன்று. முக்கியமாக, மேற்குப் பார்த்த சிவாலயம் என்பது ரொம்பவே அரிது. குடவாயில் கோயில், மேற்குப் பார்த்த சிவாலயமாகத் திகழ்கிறது.
அதுமட்டுமா? கோச்செங்கட்சோழன் மாடக்கோயில்கள் அமைத்தான் என்கிறது வரலாறு. குடவாயில் கோயிலும் மாடக்கோயில் வகையைச் சேர்ந்ததுதான். அற்புதமான ஆலயம். ஒவ்வொரு தூணும் சிற்பங்களும் கோயிலின் பிரமாண்டமும் தொன்மையைச் சொல்கிறது. கட்டடக் கலையின் மேன்மையை உணர்த்துகிறது. சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னர்களின் பக்தியைப் பறைச்சாற்றுகிறது.

கோயிலின் கோபுரம் பாதியில் நிற்கிறது. மேலே பஞ்சமூர்த்திகள் சுதையாக, சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார்கள்.
விநாயகர் சந்நிதி. கொடிமரம். பலிபீடம். நந்திதேவர். அப்படியே இடதுபக்கம் சென்றால் அம்பாள் சந்நிதி. அம்பாளின் திருநாமம் பெரியநாயகி. இவளை, பிருஹத் துர்கை என்கிறார்கள். வழக்கமாக கோஷ்டத்தில் துர்கை காட்சி தருவாள். அம்பாளே துர்கையாகவும் அருள்பாலிப்பதால், துர்கைக்கு சந்நிதி இல்லை.
வடமேற்கு மூலையில் மயில் மண்டபம். அங்கே, ஒருமுகத்துடன் திகழ்கிறார் ஆறுமுகம். நான்கு திருக்கரங்கள் கொண்டு, நான்கு கரங்களிலும் வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறார் திருக்குமரன். குடவாயில் குமரன் என்றே போற்றுகிறார்கள்.
இந்த முருக சந்நிதிக்கு மகத்தான சிறப்பும் உண்டு. அருணகிரிநாதர் திருப்புகழில், குடவாயில் குமரனைப் போற்றிப் பாடிப் பரவசமாகியிருக்கிறார். அழகன் முருகனின் அழகுக்குச் சொல்லவா வேண்டும். குடவாயில் குமரனை நினைத்தாலே போதும்... நம் குறைகளையெல்லாம் போக்கி அருள்வான் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
கோயிலின் ஸ்தல விருட்சம் வாழை மரம். குடவாயில் திருத்தலத்துக்கு வருவோரையும் நினைப்போரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த சிவ ஸ்தலத்துக்கு வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டாலே, சந்ததியினர், வாழையடி வாழையென தழைத்தோங்குவார்கள். வம்சம் வளரும் செழிக்கும் சிறக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீபைரவர், சூரிய சந்திரர்கள், சப்த மாதர்கள் , நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி என ஒவ்வொருவரும் சக்தி பொருந்தியவர்களாக. சக்தியை வழங்குபவர்களாக அழகிய சிற்ப நுட்பங்களாகக் காட்சி தருகிறார்கள்.
ஆடல்வல்லான் நடராஜரின் சபையும் சோழர் கால கலைத்திறனை எடுத்துரைக்கிறது. அவிழ்சடையுடன் கூடிய அந்த ஆனந்த தாண்டவனை அனுதினமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஆலயத்தின் நாயகன் சிவனாரின் திருநாமம் கோணேஸ்வரர். பெரியநாயகி அம்பாள் சமேத கோணேஸ்வரரை மனதாரத் தொழுதால், மனதில் வாட்டும் சோகங்களையெல்லாம் போக்கியருள்வார்கள் அம்மையும் அப்பனும்!
திருப்புகழ் நாயகன் திருக்குமரனை, குடவாயில் குமரனை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், சஷ்டி திதியிலும், கார்த்திகை நட்சத்திரத்திலும் வீட்டிலிருந்தபடியே வணங்குங்கள். குடவாயில் குமரனை நினைத்து, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக அமர்ந்து, திருப்புகழ் பாராயணம் செய்யுங்கள்.
நம் குறைகளையெல்லாம் போக்கி அருள்வான் குமரன். கவலைகளையெல்லாம் பறந்தோடச் செய்வான் முருகன். தீயசக்திகளை நம்மிடம் அண்டவிடாமல், நம்மைக் காத்தருள்வான் கந்தகுமாரன்.

- ராஜா மகாலிங்கம்

SCROLL FOR NEXT