ஆன்மிகம்

சனிக்கிழமை... காகத்துக்கு உணவு... சனி பகவான்; கெடுதல் குறைக்கும் சனீஸ்வர ஸ்லோகம்

வி. ராம்ஜி

சனி பகவான், அசுப கிரகம்தான். ஆணுமில்லாத பெண்ணுமில்லாத கிரகம் என்பார்கள். ஆனால் சேரும் கிரகத்தைப் பொறுத்து, ஆண் கிரகமாகவும் மாறும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், மண்ணீரல், காது முதலானவை சனியைக் குறிக்கும். சிறுநீரகக் கோளாறு, பாதத்தில் உண்டாகும் நோய், குஷ்டம், வலிப்பு முதலானவை சனியால் ஏற்படக்கூடியவை என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒன்பது கிரகங்களில் சனியும் ஒன்று. ஆனால் எந்தக் கிரகத்துக்கும் இல்லாத வகையில், சனியை, சனீஸ்வரன் என்று அழைக்கிறோம். ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம்... சனி.
துவஷ்டாவின் மகள் சஞ்சிகை. இவளை சூரிய பகவான் மணந்துகொண்டார். வைவஸ்வதமநு, யமன், யமுனை முதலானோர் அவர்களுக்குப் பிறந்தார்கள். இதையடுத்து, சூரியனுக்குத் தெரியாமல் சஞ்சிகை தான் பிறந்த வீட்டுக்குச் செல்ல நினைத்தாள். கணவனுக்குத் தெரியாமல் செல்லவேண்டும் என நினைத்தவள், தன் நிழலையே உருவமாகப் படைத்தாள். அவளைப் புகுந்த வீட்டில் விட்டுச் சென்று பிறந்த வீடு சென்றாள். நிழலை சாயா என்பார்கள். அதனால் இவளுக்கு சாயாதேவி என்று பெயர் அமைந்தது.
சூரியன் - சாயாதேவிக்கு, ஸாவர்ணிகா, மது, சனி, பத்திரை முதலானோர் பிறந்தார்கள். சூரிய பகவானுக்குப் பிறந்ததால் சனி, அர்க்கஜா என்று அழைக்கப்பட்டார். அர்க்கஜா என்றால் சூரியபுத்திரன் என்று அர்த்தம். அதேபோல், சாயாபுத்திரன் என்றும் சொல்லப்பட்டார் சனி.
இத்தனைப் பெருமைகள் கொண்டிருந்தாலும் சனி அசுப கிரகம்தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு நீதிபதியைப் போல் செயல்படக்கூடியவர் சனி பகவான் என்கிறார்கள் ஜோதிடர்கள்.


எப்போதெல்லாம் சனி கிரகத்தால் கஷ்டங்களும் நேருகிறதோ, அப்போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ
ரெளத்ராம்தகோ யம;
ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந;


என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொள்ளலாம்.
சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும். எள் தீபமேற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானை மனதில் நினைத்து, காகத்துக்கு சனிக்கிழமையில் உணவிட்டால், கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்வார் சனி பகவான்.
முடிந்த போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சனீஸ்வர பகவானை வேண்டுங்கள். பாபங்களில் இருந்து விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

SCROLL FOR NEXT