தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது அய்யம்பேட்டை. இங்கிருந்து ரயில்நிலையச் சாலை வழியே ஒரு கி.மீ. பயணித்தால் ,பசுபதி கோயில் ரயில்நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது அழகிய ஆலயம்.
இந்தப் பகுதியானது சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள இறைவனின் திருநாமம் கிருத்திவாகேஸ்வரர்.
தாருகானவனத்து முனிவர்களின் கர்வத்தை அழிப்பதற்காக, சிவனார் திருவுளம் கொண்டார். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து யானையை ஏவினார்கள். அந்த யானைக்குள் புகுந்தார் சிவபெருமான். அந்த யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு, உக்கிரத்துடன் வெளியே வந்தார். வேழம் உரித்த வித்தகன் என்று ஈசனைப் புகழ்கிறது புராணம். வேழம் என்றால் யானை என்று அர்த்தம். இதனால்தான் இந்தத் தலத்து இறைவனுக்கு கிருத்திவாகேஸ்வரர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
சப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. அதேபோல், சப்தமாதர்களில் கெளமாரியும் ஒருத்தி. சோழ தேசத்தில், சப்த மாதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு தலத்தில் பூஜித்ததாகச் சொல்கிறது புராண, அப்படி சப்தமாதர்களில் ஒருத்தியான கெளமாரி இங்கு வந்து வழிபட்டு, சிவ பூஜை செய்து, வரம் பெற்றாள் என்று விவரிக்கிறது இந்தக் கோயிலின் ஸ்தல புராணம்.
சரி... சப்தமாதர்கள் வழிபட்ட தலங்கள் தெரியுமா?
சக்ரமங்கை, அரிமங்கை, நந்திமங்கை, புள்ளமங்கை, தாழமங்கை, பசுபதிமங்கை என்பது மற்ற தலங்கள். இவையெல்லாம் அருகருகிலேயே அமைந்துள்ள ஊர்கள். தலங்கள்.
அஸ்திர தேவர், இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து ஈசனை வழிபட்டார். வரம் பெற்றார். இதனால் கோயிலின் திருவிழாக்களில், தீர்த்தவாரி முதலான வைபவங்களில், முதலிடத்தைத் தந்து மகிழ்வித்தார் சிவனார். இதேபோல், சூலத்தேவர் இங்கு வந்து வழிபட்டு சுய உருவத்தை மீண்டும் பெற்றார் என்றும் இதனால்தான் இந்த ஊருக்கு சூலமங்கலம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.
கெளமாரி வழிபட்ட சூலமங்கலம் கிருத்திவாகேஸ்வரரை மனதால் நினைத்து வேண்டிக்கொண்டால், பேரும்புகழும் கிடைக்க வாழலாம். நோய் நொடியின்றி வாழலாம். அம்பிகையின் அருளைப் பெற்ற ஐஸ்வரியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சப்தமாதர்களில், கெளமாரி தனம் வழங்கும் தேவதை. பொன்னும் பொருளும் தரக்கூடிய தேவதை. தனம் தானியம் பெருக்கித் தரும் தேவதையாகவே சொல்கிறார்கள் பக்தர்கள்.
கெளமாரி வழிபட்ட சூலமங்கலம் கிருத்திவாகீஸ்வரரை ஆத்மார்த்தமாக வேண்டுவோம். சிவனருளையும் அம்பிகையின் அருளையும் சப்தமாதர்களின் அருளையும் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.