ஆன்மிகம்

ஆனி வெள்ளி... சஷ்டி... முருகா சரணம்

வி. ராம்ஜி

ஆனி மாத வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்த நாளில், முருகப் பெருமானை வணங்குவோம்.விளக்கேற்றி சஷ்டி நாயகனை பிரார்த்திப்போம்.
மாதந்தோறும் சஷ்டி திதியில் முருக வழிபாடு செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் கந்தனை வணங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.
அதேபோல், செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் முருகப்பெருமானை வணங்குவதற்கும் வழிபடுவதற்குமான அற்புதமான நாட்கள்.
இந்த நாட்களில், முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள். காலையில் குளித்துவிட்டு, விரதம் தொடங்குவார்கள். மாலையில் முருகப் பெருமானை வழிபட்ட பிறகு விரத முடிப்பார்கள்.
சஞ்சலமான மனதுடன் தவித்துக் கொண்டிருப்பவர்கள்,சஷ்டியில் முருகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தாலே, மனதில் தெளிவு பிறக்கும் என்பது நம்பிக்கை.
விரதம் இருக்கிறோமோ இல்லையோ, சஷ்டியில் கந்தக் கடவுளை வணங்கினாலே, வழிபட்டாலே, தரிசித்தாலே, ஒரு ஊதுபத்தி ஏற்றி, ஒற்றைப்பூ வைத்து நமஸ்கரித்தாலே நம் எண்ணங்கள் அனைத்தும் செயலாகும். செயலிலெல்லாம் உடனிருந்து வெற்றியைத் தருவார் வெற்றிவேலன்.
இன்று சஷ்டி. வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது விசேஷம். வீட்டில் உள்ள முருகப் பெருமானின் படத்தை சுத்தப்படுத்தி, சந்தனம் குங்குமம் இடுங்கள். ஒரு பத்துநிமிடம் அமர்ந்து கண்மூடி வேண்டிக்கொள்ளுங்கள்.
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகச் செய்வார் மால்மருகன். கந்தபுராணம் படியுங்கள். வேதனைகளையெல்லாம் போக்கி அருள்வார் வேலவன்.
இந்தநாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சூட்டுங்கள். வீட்டுக் கவலையோ உடல் கவலையோ இனியில்லை. அவன் பார்த்துக்கொள்வான்.
முடிந்தால், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். தடைப்பட்ட திருமணம், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவான் வள்ளிமணாளன்.

SCROLL FOR NEXT