தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம். சிவபெருமான், அந்தணர் வேடத்தில் மாணிக்கவாசகரைக் காண அவர் தங்கியிருந்த மடத்துக்கு வந்தார். மாணிக்கவாசகரிடம் சென்றார். ‘’தாங்கள் எழுதிய திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொல்லவேண்டும். அதை என் காதுகுளிரக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டுக்கொண்டே, ஓலைச்சுவடியில் எழுதிக்கொள்கிறேன்’ என்றார்.
மாணிக்கவாசகர் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின்658 பாடல்களையும் பாடினார். அதைக் கேட்டு சொக்கிப்போனார். அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டார். பாடி முடித்ததும், ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு, நடராஜர் பெருமானின் திருச்சந்நிதியின் முன்னே வைத்துவிட்டு அந்தணர் மறைந்தார்.
மறுநாள்... ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் அதாவது தீட்சிதர்கள் ஆடல்வல்லானின் சந்நிதிக்கு வந்தார்கள். அங்கே இருந்த ஓலைச்சுவடிகளைக் கண்டார்கள்.
’என்ன இது?’ என்று குழம்பியபடி எடுத்துப் பார்த்தார்கள். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் படித்துப் பார்த்தார்கள். கடைசி ஓலையில்... ’மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என கையொப்பமிட்டிருப்பதைக் கண்டார்கள். சிலிர்த்தார்கள்.
உடனே எல்லோரும் ஓலைச்சுவடியை எடுத்துக் கொண்டு, மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்துக்குச் சென்றார்கள். அவரிடம் அனைத்தையும் தெரிவித்தார்கள். ஓலைச்சுவடியை நீட்டினார்கள். அவற்றை வாங்கிப் பார்த்தார். அதிர்ந்து போனார். ‘ஆமாம், நான் சொல்லச் சொல்ல எழுதியதுதான்’ என்று வியப்பும் மலைப்புமாகச் சொன்னார். ’எம் சிவமே எம் சிவமே..’ என்று ஓலைச்சுவடிகளை அப்படியே நெஞ்சில் அணைத்துக் கொண்டார். கண்களில் ஒற்றிக்கொண்டார். சிரசில் வைத்துக் கொண்டு கண்கள் வழிய நின்றார்.
தீட்சிதர்கள், ‘திருவாசகப் பாடலுக்கு என்ன பொருள்’ என்று மாணிக்கவாசகரை வணங்கிக் கேட்டார்கள். அவர் ஓலைச்சுவடிகளைப் பார்த்தார். ‘இவை அனைத்துக்கும் பொருள் அவர்தான்’ என்று ஆலயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அந்த விநாடியே... அங்கே ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளி மாணிக்கவாசகரையே பார்த்துக்கொண்டிருந்தது. முகம் முழுக்க மலர்ந்தவராக, சிரசின் மீது கைகளைக் குவித்தபடி, அந்த ஒளியை நோக்கி நடந்தார். ‘எம் சிவமே எம் சிவமே எம் சிவமே...’ என்று சொல்லிக்கொண்டே ஒளிக்கு அருகில் சென்றார். ஒளியில் ஐக்கியமானார். இரண்டறக் கலந்தார்.
அப்படி மாணிக்கவாசகரை இறைவன் ஒளியாய் வந்து ஐக்கியமாக்கிக் கொண்ட நன்னாள்... ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என்கிறது புராணம். அதனால்தான் வருடந்தோறும் ஆனி மக நட்சத்திரநாள், மாணிக்கவாசகரின் குருபூஜை நன்னாளாக கொண்டாடப்படுகிறது.
சிதம்பரம், ஆவுடையார்கோவில், திருவாதவூர் மற்றும் சிவாலயங்களில் மாணிக்கவாசகர் குருபூஜை சிறப்புற கொண்டாடப்படுகிறது.
திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பெருமானை மனதில் நிறுத்து சிவனாரை வேண்டுவோம். அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்.
ஆனி மகம் - மாணிக்கவாசகர் குருபூஜை