சூரிய கிரகணம், நாளைய தினம் (21.6.2020) வருகிறது. நீண்டகாலத்துக்குப் பிறகு வருகிறது இந்த சூரிய கிரகணம். இதற்கு சூடாமணி சூரிய கிரகணம் என்று பெயர். மிக மிக விசேஷமானது இந்த கிரகணம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த கிரகணத்தின் போது, தானங்கள் செய்வதும் பூஜைகள் மேற்கொள்வதும் பிரார்த்தனை செய்வதும் மும்முடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள்.
கிரகணங்களில், சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்றிருக்கின்றன. உலகில், சூரிய கிரகணம் என்பதும் சந்திர கிரகணம் என்பதும் வந்துகொண்டிருப்பவைதான். நாளை ஆனி மாதம் 7ம் தேதி, ஜூன் மாதம் 21ம் தேதி சூரிய கிரகணம்.
இது வழக்கமாக வரும் சூரிய கிரகணம் அல்ல. எப்போதோ ஒருமுறை வரக்கூடிய சூரிய கிரகணம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதை சூடாமணி சூரிய கிரகணம் என்கிறார்கள். அதாவது, ஞாயிற்றுக்கிழமையும் சூரிய கிரகணமும் இணைந்து வருவது எப்போதோ நிகழக்கூடியது. அது இந்தமுறை நிகழ்ந்துள்ளது.
நாளைய தினம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.20 மணிக்குத் தொடங்குகிற சூரிய கிரகணமானது, மதியம் 1.40 மணிக்கு நிறைவுறுகிறது. இந்த நேரம் சூரிய கிரகண நேரம். இந்த நேரத்தில், இறை பற்றிய சிந்தனையில் இருப்பதே உத்தமம். வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, தெரிந்த ஜபங்களைச் சொல்லலாம். பகவானின் நாமாவளிகளைச் சொல்லலாம். அம்மன் பாடல்களோ முருகன் பாடல்களோ சிவ ஸ்துதியோ விஷ்ணு சகஸ்ரநாமமோ எது தெரியுமோ அவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஸ்லோகங்கள் தெரிந்திருந்தால் சொல்லலாம்.
வழக்கமாக, வழக்கமான சமயங்களில் நாம் சொல்லும் மந்திரங்களுக்கு என்ன பலன் உண்டோ... அவற்றை சூரிய கிரகண வேளையில், அதிலும் சூடாமணி சூரிய கிரகண வேளையில் சொல்வதால், மும்முடங்கு பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
காலையில் எழுந்ததும் வழக்கமாகக் குளித்து வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுவதை, எப்போதும் போலவே செய்யலாம். பின்னர், காலை 10.20 மணியில் இருந்து வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்துகொண்டு, தெரிந்த மந்திரங்களை, ஸ்லோகங்களை, பக்திப் பாடல்களை, சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்துகொண்டே இருக்கலாம்.
பின்னர், 1.40 மணிக்கு கிரகணம் முடிகிறது. முடிந்ததும் குளிக்கவேண்டும். பெண்கள் அவசியம் தலைக்குக் குளிக்கவேண்டும். குளித்துவிட்டு, மீண்டும் விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கலோ சுத்த அன்னமோ (வெறும் சாதம்) ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, நமஸ்கரித்துவிட்டு, பின்னர் சாப்பிடவேண்டும்.
சூரிய கிரகணநாளில், தர்ப்பணம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். அதாவது காலை 10.20 மணியில் இருந்து மதியம் 1.40 மணி வரை கிரகண நேரம். இந்த நேரத்தின் மத்திம நேரம் அதாவது நடுவாக இருக்கும் நேரத்தில் 12 மணிக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். வழக்கமாக, அமாவாசை முதலான நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தை விட, தர்ப்பணத்தின் பலன்களை விட நூறு மடங்கு பலன் கிரகண தர்ப்பணத்தால் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அதேபோல், கிரகணத்தில் தர்ப்பணம் செய்வதும் ஜபம் உள்ளிட்ட பாராயணம் செய்வதும் எப்படி விசேஷமோ... தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. குடை, செருப்பு, வஸ்திரம், தீர்த்தப்பாத்திரம் என ஏதேனும் வழங்குவது தோஷங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும். வீட்டின் தரித்திரத்தையெல்லாம் போக்கும். இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வர்யமும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நாளைய தினம் சூரிய கிரகணம். எப்போதோ அரிதாக வருகிற சூடாமணி சூரிய கிரகணம். ஞாயிறும் சூரிய கிரகணமும் இணைந்து வரக்கூடிய அற்புதமான நாள். மறக்காமல் பித்ருக்களை வணங்குவோம். இறைவனை பிரார்த்திப்போம். தான தருமங்கள் செய்வோம்.
சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்னல்களில்லாமல் இனிதே வாழ்வோம்!
நாளை ஞாயிற்றுக்கிழமை 21ம் தேதி சூரிய கிரகணம்.