அற்புதமான ஆனி மாத வெள்ளிக்கிழமையில், மாத சிவராத்திரி அமைந்துள்ளது. நம் இன்னல்களையெல்லாம் தீர்த்தருள்வார் தென்னாடுடைய சிவன்.
மகேஸ்வரனை வழிபடுவதற்கு நாளென்ன கோளென்ன என்பார்கள். அதேசமயம் சிவபெருமானை அவருக்கு உரிய நாட்களில், முறையாக வணங்கி வழிபட்டால் சிவனாரின் பேரருளைப் பெறலாம் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் சிவபக்தர்கள்.
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கே உரிய அற்புதமான நாள். இந்தநாளில், சிவனாரையும் நந்திதேவரையும் தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த சக்தி வாய்ந்தது என்றும் சாந்நித்தியம் நிறைந்தது என்றும் விவரிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
பிரதோஷ நாளில், சிவனாரை நினைத்து சிவ ஸ்திதிகளைச் சொல்லி பாராயணம் செய்வது இல்லத்தில் ஒளியேற்றும். உள்ளத்தில் துர்சிந்தனைகளும் கவலைகளும் விலகும் என்பது ஐதீகம்.
பொதுவாகவே, பிரதோஷத்தன்று, நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கும் 16 வகை அபிஷேகங்கள் நடைபெறும். அந்த அபிஷேகப் பொருட்களை வழங்கலாம். இதனால் வீட்டின் தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டு சிவனாரை பூஜிப்பவர்களும் உண்டு. அதேபோல், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிக முக்கியமான நாள். இதேபோல், ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். இந்தநாளில், எண்ணற்ற சிவபக்தர்கள், விரதம் இருப்பார்கள். சிவ நாமங்களைச் சொல்லி ருத்ரம் பாராயணம் செய்வார்கள்.
நாளை 19.6.2020 வெள்ளிக்கிழமை, மாத சிவராத்திரி. ஆனி மாத சிவராத்திரி. அற்புதம் நிறைந்த ஆனி சிவராத்திரி நாளில், வீட்டில் இருந்தபடியே சிவனாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் உள்ள சிவபெருமானின் திருவுருவப் படத்துக்கு மலர்களாலும் முடிந்தால் வில்வத்தாலும் அலங்கரியுங்கள்.
சிவபுராணம் படியுங்கள். வெள்ளிக்கிழமையில் சிவராத்திரி வருவது விசேஷம். எனவே, காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள்.முடிந்தால், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு வழங்குங்கள். நம் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியுண்டாகும்.