வயிற்றில் வளரும் கருவைக் காத்து ரட்சிக்கக்கூடியவள். சுகப்பிரசவமாக்கி அருளக்கூடியவள் என்று எல்லோராலும் போற்றப்படுகிறாள் கர்ப்ப ரட்ஷாம்பிக்கை.
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஒப்பற்ற திருத்தலம் திருக்கருகாவூர். ஊரின் பெயரே, அம்பாளின் மகிமையைச் சொல்லிவிடும்.
சிவனாரின் திருநாமம் முல்லைவனநாதர். அம்பாளின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. கருணையே வடிவானவள். கனிவே முகமெனக் கொண்டு பார்ப்பவள். கருவுற்ற பெண்களின் பேறுகாலத்தில், அவர்களையும் அவர்களுக்குள் இருக்கிற கருவையும் காபந்து செய்கிறவள். சுகப்பிரசவமாக்கி அருளும் அன்னை இவள்!
உலகில் எந்த ஊரில் இருந்தாலும் கருவுற்ற பெண்கள், தங்கள் தாயிடம் சொல்லுவதைப் போல், இவளிடம் சொல்லி முறையிட்டால் போதும். வேண்டிக்கொண்டால் போதும்... சுகப்பிரசவமாக்கி தாயையும் சேயையும் காத்தருள்வாள் அம்பிகை.
பெண்கள் அனைவரும் வணங்கி வழிபடவேண்டிய திருத்தலம் இது. வாழ்வில் ஒருமுறையேனும் கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அவளை கண்ணாரத் தரிசிக்க வேண்டும். அப்படியொரு அற்புதத் திருத்தலம் இது என்கிறார்கள் பக்தர்கள்.
திருமணத்தடையால் கலங்கித் தவிப்போர், கர்ப்ப ரட்சாம்பிகை சந்நிதியில், நெய்யால் மெழுகிக் கோலமிடும் பிரார்த்தனை ரொம்பவே விசேஷம். அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தித்துக் கொண்டால், சீக்கிரமே மணமாலை தோள் சேரும், மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
அதேபோல், திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறதே என்று கலங்கித் தவிப்பவர்கள், இந்த வேண்டுதலைச் செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என்கிறார்கள் அம்பாளின் சாந்நித்தியத்தை உணர்ந்த பக்தர்கள்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... எண்ணெய்ப் பிரசாதம்.
கருவுற்றவர்கள், சுகப்பிரசவம் நிகழுவதற்காக அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து அர்ச்சித்துக் கொடுக்கப்படும் எண்ணெய் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. கருவுற்றவர்களின் ஒன்பதாவது மாதம் தொடங்கியதும் தினமும் இந்த எண்ணெய்ப் பிரசாதத்தை வயிற்றில் தடவி வரவேண்டும். இதனால் எந்தச் சிக்கலுமில்லாமல் சுகப்பிரசவம் நிகழும், குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
கர்ப்ப ரட்ஷாம்பிகையின் எண்ணெய்ப் பிரசாதத்தை தங்களுக்குத் தெரிந்த உறவுக்காரப் பெண்கள், உடன் பிறந்த சகோதரிகள், தோழிகள், தெரிந்தவர்கள் என உலகெங்கிலும் உள்ள கருவுற்ற பெண்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள் பக்தர்கள்.
தடைப்பட்ட திருமணம் நடந்தேறவும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறவும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் சதேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
செளபாக்யம் தேஹிமே சுபே
செளமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயினி மஹாமாயே
மஹா யோ கின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம
இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி சொல்லிவரவேண்டும். அப்போது வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு பூக்களிட்டு, பாயசம் நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.