பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். நம் வாழ்க்கையை இனிமையாக்கி அருள்வார் அப்பாலரங்கநாதப் பெருமாள்.
கல்லணைக்கு அருகில் உள்ளது கோவிலடி. இங்கே உள்ள அற்புதமான கோயிலில் சேவை சாதிக்கிறார் அப்பால ரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் கமலவல்லித் தாயார். இந்திராணி எனும் திருநாமமும் உண்டு. திருச்சியில் இருந்து கல்லணை வழியே தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவிலடி கிராமம்.
2000 வருடப் பழைமை வாய்ந்த அழகான திருத்தலம். 108 வைணவத் தலங்களில் 8வது திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்த திருத்தலம். அழகு ததும்பக் காட்சி தரும் பெருமாளைக் கண் குளிர தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
பெருமாளுக்கு அப்பக்குடத்தான் எனும் திருநாமமும் உண்டு. எந்தக் கோயிலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு, பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்யும் திருத்தலம் இது. தினமும் இரவில் அப்பம் நைவேத்தியம் செய்வார்கள் இங்கே!
உபரிசிரவசுவிடம் இருந்து மகாவிஷ்ணு அப்பக்குடம் பெற்றார். எனவே பெருமாளுக்கு அப்பக்குடத்தான் எனும் பெயர் அமைந்தது. வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை ஏந்தியபடி காட்சி தருகிறார் பெருமாள்.
இந்திரனுக்கு கர்வம் போக்கிய திருத்தலம் இது. அதுமட்டுமா? உபரிசிரவசு மன்னனின் சாபத்தையும் பாவத்தையும் போக்கி அருளிய தலம் என்கிறது ஸ்தல புராணம்.
அப்பால ரங்கநாதர் குடியிருக்கும் இந்தத் தலமும் பஞ்சரங்கத் தலங்களில் ஒன்று. நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. மார்க்கண்டேயனுக்கு மரண பயத்தைப் போக்கி அருளினார் இந்த பெருமாள்!
நம்மாழ்வார், இந்தத் தலத்துக்கு வந்து இங்கே உள்ள பெருமாளை ஸேவித்தார். பின்னர், இங்கேயே மோட்சம் அடைந்தார் என்பது ஐதீகம். இதனால், இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளை வணங்கினால், வைகுண்டத்தில் இடம் உண்டு, மோட்சம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புதன், சனிக்கிழமை, ஏகாதசி முதலான நாட்களில், அப்பால ரங்கநாதரை நினைத்து வீட்டில், அப்பம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அப்பத்தை அக்கம்பக்கத்தாருக்கும் குழந்தைகளுக்கும் வழங்குங்கள். நம் பாவத்தைப் போக்கி அருள்வார் அப்பால ரங்கநாதர்.