அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அசுரனை ஜெயித்துக் கொல்வதற்காக அகத்தியர் உபாசித்த கணபதி அவர். திருச்செங்கட்டான்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே.
வாதாபி என்ற அசுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அசுர வாதாபி வாழ்ந்துவந்த ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சாளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகரமாக ஆயிற்று.
சாளுக்கிய ராஜாக்களில் புலிகேசி என்று பெயருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். புலிகேசி என்று தப்பாகச் சொல்கிறார்கள். புலியுமில்லை. எலியுமில்லை. சாளுக்கிய சாசனங்களில் செப்பேடுகள் சமஸ்கிருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும். அப்படிக் கன்னடத்தில் பொலெகேசி என்று சொல்லியிருக்கிறது. அதைப் பல பேர் பல ரூபமாக தினுசு பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள்.
பொலே என்பதற்குத் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வம்சத்தினர்களில் ராஜாவான பிறகு எல்லாருமே சமஸ்கிருதப் பெயர்தான் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்தப் பெயரைப் புலிகேசின், புலிகேசி என்று சமஸ்கிருதமாகவே சரித்திர ஆசிரியர்கள் தீர்மானம் பண்ணி, இங்கிலீஷில் அப்படித்தான் எழுதுகிறார்கள்.
புலிகேசி என்றால் புல (ள) காங்கிதம் அடைவதென்கிறோமே, அப்படி ஆனந்தத்தில் மயிர்க்கூச்சு எடுத்திருப்பவன் என்று அர்த்தம். 'ரிஷிகேசன்' என்று தப்பாகச் சொல்லும் ஹ்ருஷீகேசன் என்ற பெயருக்கும் அப்படி ஒரு அர்த்தமுன்டு. ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றை அடக்கியாளும் ஈசன் ஹ்ருஷீகேசன் என்று ஆசார்யாள் விஷ்ணு சகஸ்ர நாம பாஷ்யத்தில் ஒரு அர்த்தம் சொன்னாலும், சூர்ய சந்திர ரூபங்களில் பகவான் உள்ளபோது அவற்றின் கேசம் போன்ற ரச்மி - கதிர்களால் உலகத்தை மகிழ்விப்பதாலும், இப்படிப் பெயர் என்று இன்னொரு அர்த்தமும் கொடுத்திருக்கிறார்.
ஹ்ருஷ் என்கிற தாது மயிர்க்கூச்செடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதைக் குறிக்கும். வீர தீர சாகசங்களை ஒரு ராஜா தானும் மயிர்க்கூச்செரிந்து செய்வான். அதைப் பார்க்கிற, கேட்கிறவர்களும் புளகமடையச் செய்கிறவனே புலிகேசி. புலம் என்றாலே புளகம்தான். புளகமுற்ற கேசம் உடையவன் புலகேசி. புலக+ஈச, புகளமடைந்தவனும், ராஜாவாக இருக்கிறவனும் என்று பிரித்துச் சொல்லலாம்.
எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் பார்க்கப்போகும் கதையிலே வரும் இரண்டாவது புலிகேசிக்குப் போட்டியாயிருந்த இரண்டு பெரிய ராஜாக்களில் ஒருத்தன் மகேந்திரவர்ம பல்லவன். அவனைவிடப் பெரிய போட்டி வட தேசத்தில் சாம்ராஜ்யாதிபதியாயிருந்த ஹர்ஷவர்த்தனன். ஹர்ஷ் என்பதற்கும் ஆனந்தத்தில் மயிர் கூச்செடுத்திருப்பவன் என்பதுதான் அர்த்தம். அந்த ஹர்ஷனையே புறமுதுகு காட்டும்படி பண்ணினவன் புலிகேசி. அதனாலேயே அந்தப் பெயரின் அர்த்தத்தைக் கொண்ட புலிகேசிப் பெயரைத் தானும் வைத்துக்கொண்டிருப்பான் போலிருக்கிறது. ராஜாவாவதற்கு முந்தி அவனுக்குப் பேர் எரெயம்மா என்பது. அது கன்னடப் பேர்.
ராஜாவான பிறகு சமஸ்கிருதப் பேர் வைத்துக்கொண்டபோது, தன் பாட்டனார் பேர் புலிகேசி என்று இருப்பதையும் அது தன்னுடைய arch rival ஆன - முக்கியமான போட்டியாளனான ஹர்ஷன் என்பதற்கே இன்னொரு வார்த்தையாகவும் இருப்பதைப் பார்த்து அந்தப் பேர் சூட்டிக்கொண்டிருப்பானோ என்று தோன்றுகிறது.
கேசத்துக்கு அளகம் என்று ஒரு பேர். யக்ஷராஜனும், பணத்துக்குத் தேவதையுமான குபேரனுக்கு அளகேசன் என்று பேர். அவனுடைய ராஜதானி அளகாபுரி. ரோமாஞ்சம் உண்டாக்கும் சிறப்பை அளகேசன், ஹ்ருஷீகேசன், புலிகேசி முதலிய பெயர்கள் காட்டுகின்றன.
இரண்டாவது புலிகேசி சமாச்சாரத்திற்கு வருகிறேன். முதலில் சிற்றப்பாவால் வஞ்சிக்கப்பட்டு ராஜ்யாதிகார உரிமையை இழந்து கஷ்டப்பட்டான். அப்புறம் புஜ, பல பராக்கிரமத்தால் சிற்றப்பாவை வீழ்த்தி சிம்மாசனம் ஏறினான். சாளுக்கிய ராஜாக்களுக்குள்ளேயே தலைசிறந்த இடம் பெற்றான்.
சத்தியத்திற்குப் புகலிடமாயிருப்பவன் என்ற அர்த்தமுள்ள சத்யாச்ரயன் என்ற பட்டத்தோடு ஆட்சி நடத்தினான். ராஜாதிராஜ ஹர்ஷவர்தனனும் தன்னை எதிர்த்துப் போராடாதபடி கலங்க அடித்து, அவன் நர்மதைக்கு வடக்கோடு ராஜ்யத்திற்கு எல்லை காட்டிக்கொண்டு திரும்பும்படிப் பண்ணினான்.
அப்போது தமிழ் தேசத்தில் பெரிய ராஜ்யாதிபதியாக இருந்தவன் பல்லவ ராஜாவான மகேந்திர வர்மா. 'மகேந்திர விக்ரம வர்மன்' என்பது அவனே அவன் எழுதிய மத்த விலாச பாராயணம் என்ற ஹாஸ்ய நாடகத்தில் சொல்லிக்கொள்ளும் பெயர். சில்பக் கலையும், சங்கீதக் கலையும் எந்நாளும் கொண்டாடத்தக்க பெரிய கலைஞனாகவும், ரசிகனாகவும் இருந்தவன்.
அவன் மேல் புலிகேசி படையெடுத்து, பல்லவ சைன்யம் காஞ்சிபுரம் கோட்டைக்குள்ளேயே முடங்கிப் போகும்படிச் செய்து ஜயித்துவிட்டான். இது தீர்மானமாக சாசன ஆதாரங்களில் தெரிவதாகச் சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்
மகேந்திர வர்மன் பிள்ளை நரசிம்ம வர்மன். மாமல்லன் என்று பேர் வாங்கிய அந்த வீராதி வீரன் காலத்தில்தான் பழிவாங்க முடிந்தது. அவன் வாதாபி மேலே படையெடுத்துப் போய் ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட்டான். புலகேசி நேரே பல்லவ ராஜதானியான காஞ்சிக்கு உள்ளே போய் அதை ஜயிக்கவில்லை. மகேந்திரனைக் காஞ்சிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும்படி பண்ணி, வெளியில்தான் ஜெயித்தான். மாமல்லனோ பதிலடி என்று அதைவிட உக்கிரமாக சளுக்கிய ராஜதானியான வாதாபிக்கு உள்ளேயே போய் அதோடு நகரத்தையே நாசப்படுத்திவிட்டான்.
ராஜாக்கள் ஒரே சத்வமாக, சாதுவாக இருக்க முடியாதுதான். நம்முடைய ராஜ சாஸ்திரங்களின்படி அப்படி இருக்கக் கூடாதும்தான். தர்ம யுத்தம், தங்களை ஜயித்தவனைத் திரும்பத் தாக்கி ஜயிப்பது எல்லாம் அவர்களுக்கு வீரக் கடமையாகவே சொல்லியிருக்கிறது. ஆனாலும் அதில் கட்டுப்பாடு வேண்டும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)