ஆன்மிகம்

ஆனி பிறப்பு, சோம வாரம், சிவ வழிபாடு - மனக்குழப்பம் விலகும்; மங்கல காரியம் நடக்கும்! 

செய்திப்பிரிவு


ஆனி மாதப் பிறப்பும் சோம வாரமும் இணைந்திருக்கிறது. இந்த அற்புதமான வேளையில், சிவ வழிபாடு செய்வதும் சிவ புராணம் படித்து வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலம் தரும். எனவே, ஆனி மாதப் பிறப்பான திங்கட்கிழமை (15.6.2020) சிவனாரை பிரார்த்திப்போம். மனக்குழப்பமெல்லாம் தீர்த்து வைப்பார் ஈசன்.


ஆங்கில மாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தேதியையும் மாதத்தையும் சொல்லி வருவதில், தமிழ் மாதத்தையும் அதன் மாதப் பிறப்பையும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கத் தொடங்கிவிட்டோம்.


கல்யாணப் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் மட்டுமே தமிழ் மாதத் தேதியும் தமிழ் மாதமும் குறிப்பிடப்படுகிறது. அதேசமயம், தமிழ் மாதப் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது சாஸ்திரம்.


தமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம், காகத்துக்கு உணவு, வீட்டில் விளக்கேற்றுதல் என்றிருப்பது போல சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையும் மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


திங்கட்கிழமை என்பதை சோம வாரம் என்பார்கள். சோம வாரத்தில் சிவ வழிபாடு பலம் தரும், பலன் தரும். தமிழ் மாதப் பிறப்பானது திங்கட்கிழமையில் வருவதால், அன்றைய தினம் சிவனாரை வழிபடுவது நல்ல நல்ல பலன்களை வழங்கும்.


நாளை ஆனி மாதப் பிறப்பு (15.6.2020). திங்கட்கிழமை. இந்த அற்புதமான நாளில், சிவனாரை வழிபடுங்கள். வில்வம் சார்த்தி வழிபடுங்கள். அரளி மலர் கொண்டு அர்ச்சியுங்கள். சிவ ஸ்திதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஜபிக்கலாம். சிவபுராணம் பாராயணம் செய்யலாம்.


தென்னாடுடைய சிவனை மனதார வணங்குவோம். மனதில் உள்ள குழப்பங்களும் பயமும் விலகும். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

SCROLL FOR NEXT